” இந்த அரசாங்கம் வீழ்ச்சியடைந்தால் நாட்டை பொறுப்பேற்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவே உள்ளது.” என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றின் இணைந்த பயணம் தொடர்பில் நாளை புதன்கிழமை சாதகமானதொரு முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பொய்யுரைக்கும் அரசியலை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், நாட்டுக்காக பொதுவானதொரு வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி செல்வதற்கும் நாட்டு மக்கள் முன்வந்துள்ளனர்.
2022 ஜுலை மாதம் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியெற்றபோது, தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இணையுமாறு அழைப்பு விடுத்தார். இந்த திட்டத்துக்கு அப்பால் சென்று எதையும் செய்ய முடியாது.
அவ்வாறு செய்ய முடியும் எனக் கூறுவது பொய்யாகும். அவ்வாறு பொய்யுரைத்தால் மக்கள் அவர்களை வீதியில் தாக்குதல் நிலை ஏற்படும்.
ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் பற்றி புதன்கிழமை நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களில் ஆராயப்பட்டு, சாதகமான முடிவு எடுக்கப்படும்.
ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த பயணத்தைவிட சிறப்பான பயணத்தை இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியுமா? முடியாது என்பதே எனது கருத்தாகும். நாம் கொண்டுவந்த சட்டத், திட்டங்கள் மீறப்பட்டுவருகின்றன.
அப்படியானால் அரசின் வீழ்ச்சி ஆரம்பமாகின்றது. அவ்வாறான நிலை ஏற்பட்டால் நாட்டை ஐதேக பொறுப்பேற்கும். அது பற்றி குழப்பமடையத் தேவையில்லை.” – என்றார்.