சினிமா படப்பிடிப்பின்போது மாரடைப்பு ஏற்பட்டதால் கன்னட நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்தார்.
சிறுவயதிலேயே மேடை நாடகங்களில் நடித்து வந்த ராஜு தலிகோட்டே, ‘ஹெண்டத்தி அந்த்ரே ஹெண்டத்தி’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். மனசாரே, பஞ்சாரங்கி, ராஜதானி, மைனா, டோபிவாலா, பஞ்சாபி ஹவுஸ் என பல படங்களில் நடித்துள்ளார். ‘பிக் பாஸ்’ கன்னட நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ள அவர், தொடர்ந்து நாடகங்களிலும் நடித்து வந்தார்.
படப்பிடிப்பு ஒன்றுக்காக அவர் உடுப்பி சென்றிருந்தார். திங்கள்கிழமை அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் மறைவுக்குக் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவ ராஜ்குமார் உள்பட நடிகர், நடிகைகளும் கர்நாடகத் துணை முதல்வர் சிவக்குமார், முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.