புதிய பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி இறுதிப்படுத்தப்படும். ஒக்டோபர் முதல் வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலின்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில் உள்ள தாமதம் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
” பயங்கரவாத தடைச்சட்டத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களே நாங்கள். அதனை தக்கவைக்கும் எண்ணம் இல்லை. எனினும், சட்டமொன்றை இரத்து செய்யும்போது அதனை விஞ்ஞானப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அமுல்படுத்தவுள்ள புதிய சட்டவரைவை தயாரிப்பதற்குரிய குழு எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளது.
அன்றைய தினம் சட்டமூலம் இறுதிப்படுத்தப்பட்டு கையளிக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு நடந்த பின்பு பொதுமக்கள் கருத்துக்காக சமூகத்தில் ஒரு மாதத்துக்கு விடப்படும்.
ஒக்டோபர் 28 ஆம் திகதி குழு அறிக்கையை வழங்கினால், சட்டமூலம் தயார் என்ற அறிவிப்பை எம்மால் நவம்பர் முதல் வாரத்தில் விடுக்க முடியும். நாட்டின் பாதுகாப்பு கருதி, புதிய சட்டம்வரும்வரை இருக்கும் சட்டத்தை பயன்படுத்த நேரிடும்.” – என்றார் நீதி அமைச்சர்.