புதிய தொழில்முயற்சியாளர்களுக்கு கடன் வசதிகளை வழங்குவதற்காக நிதி அமைச்சு மற்றும் வங்கிகள் இணைந்து ஒரு கூட்டுத்திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்த வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் புதிய தொழில்முயற்சியாளர்களுக்குக் கடன் வழங்குவதற்காக எண்பதாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகையை பயனுள்ள வகையில் புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்குவதற்காகவே இந்தக் கூட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இந்தக் கடன் வசதிகள் எந்தெந்தத் துறைகளுக்கு வழங்கப்படவுள்ளன என்றும் சம்பந்தப்பட்ட கடன் வழங்கும் செயன்முறை குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டுவதற்காக ஒரு செயலமர்வை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் அனைத்துத் தொழிலாளர்களினதும் தகவல்களை ஒரே ஒரு அமைப்பிற்குள் சேகரிப்பதற்காக, கைத்தொழிலாளர்களுக்கான தேசியத் தரவு முறைமை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்தார்.
அதற்கமைய, அந்தத் தரவு முறைமையில் பதிவுசெய்து கொள்வதற்காக அனைத்துத் தொழில் முயற்சியாளர்களையும் அறிவுறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அந்தத் தரவு முறைமையில் பதிவுசெய்து கொள்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்றும் இங்கு கருத்துத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்துள்ள கலைஞர்களுக்குப் பிணையில்லாத கடன் வசதிகளை வழங்குவது குறித்தும் குழுவில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
அத்துடன், வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் அந்தத் தொழிற்சாலையின் பிரதானிகள் குழுவில் தகவல்களைச் முன்வைத்தனர். அதற்கமைய, தொழிற்சாலையில் இருந்த குறைபாடுகளைச் சரிசெய்து, இதுவரை காணப்பட்ட மாதாந்த 150 – 180 மெட்ரிக் டொன் உற்பத்தித் திறனை 400 மெட்ரிக் டொன் வரை அதிகரிக்க முடிந்துள்ளதாக அந்த அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தனர்.
அத்துடன், இந்நாட்டில் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள தேசிய ஆலோசனைக் கையேடு குறித்தும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.
தற்போது குழப்பமான வகையில் நடைமுறையில் உள்ள அகழ்வு அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதை மேலும் முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அடுத்த ஜனவரி மாதம் இந்தக் கையேடு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.










