பொருளாதார முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகள் மிக முக்கியமானது
பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி, விவசாயத்தை மீண்டும் ஆரம்பிக்க மிகவும் துல்லியமான தரவுகளை வேறுபடுத்தி அடையாளம் காணவும்
பொதுமக்களுக்கு தேவையான அவசர சேவைகளை வழங்குவதில் அனைத்து நிறுவனங்களுக்கிடையிலும் தொடர்ச்சியான தொடர்பைப் பேணுவது அவசியம்
தம்புள்ளை மாவட்ட ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கும் புதிய இடத்திற்கு மாற்றுவதற்குமான திட்டத்தை அவசரமாக சமர்ப்பிக்கவும்
– ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை
பொருளாதார முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகள் மிகவும் முக்கியம் என்றும், எனவே எப்போதும் துல்லியமான தரவுகளை வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
அனர்த்தத்தால் சேதமடைந்த பயிர் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இழப்பீட்டுத் தொகையை மிகவும் தகுதியானவர்களுக்கு வழங்கக்கூடிய வகையில் துல்லியமான தரவுகளை வேறுபடுத்திக் கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதற்கு முன்னர், விவசாயத் திணைக்களம் நாட்டில் அரிசி மேலதிகக் கையிருப்பு இருப்பதாக தரவுகளை வழங்கிய போதிலும், அரிசி பற்றாக்குறைக்கு முகங்கொடுக்க நேர்ந்ததை ஜனாதிபதி இங்கு நினைவு கூர்ந்தார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாத்தளை மாவட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து இன்று (06) மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களை சுட்டிக்காட்டினார்.
மாத்தளை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில், 5,501 குடும்பங்களைச் சேர்ந்த 11,804 பேர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் இயங்கும் 44 பாதுகாப்பு மையங்களில் 4,113 பேர் தங்கியுள்ளனர். மேலும்,119 வீடுகள் முழுமையாகவும், 2,618 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மாவட்டத்தில் நெடுஞ்சாலைகள், மின்சாரம், நீர் வழங்கல், தொடர்பாடல் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றை புனரமைத்தல் மற்றும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை மீண்டும் தொடங்குவதற்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றத்தை ஜனாதிபதி இதன்போது ஆராய்ந்தார்.
அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் 16 பிரதான வீதிகள் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் 12 வீதிகள் புனரமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். எஞ்சியுள்ள வீதிகளான வத்தேகம – கந்தேகெதர, உக்குவெல – எல்கடுவ, மொரகஹகந்த – வெல்லவல, மற்றும் ரத்தொட்ட – இலுக்கும்புர ஆகிய வீதிகளை அவசரமாக புனரமைத்து திறப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், 38 மாகாண வீதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 17 பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன், அதில் 19 வீதிகளை முழுமையாகவும், 19 வீதிகளை பகுதியளவு திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அனர்த்த நிலைமை காரணமாக மாவட்டத்தில் 58 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விரைவாக சீர்செய்து, சுமார் 92% மக்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதைகள் சேதமடைந்திருத்தல் உட்பட பல்வேறு சிக்கல்கள் காரணமாக தாமதமாகி உள்ள ரத்தொட்ட, அம்பன்கங்க, லக்கல, உக்குவெல, யடவத்த, பெல்லேபொல, மாத்தளை போன்ற பகுதிகளில் மின் இணைப்புகளை விரைவாக சீர்செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மாவட்டத்தில் தடைபட்ட நீர் விநியோகத்தை சீர்செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், பாதைகள் சேதமடைந்திருத்தல் காரணமாக சுமார் 500 குடும்பங்கள் ஒரு வாரமாக குடிநீர் இல்லாமல் இருப்பதும் இங்கு தெரியவந்தது. இந்த விடயம் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைந்து, தற்போதுள்ள தடைகளை நீக்கி, மக்களுக்கு உடனடியாக நீர் விநியோகத்தை வழங்குமாறு பணித்தார்.
மின்சாரம், நீர் அல்லது தொடர்பாடல் போன்ற எந்தவொரு வசதியையும் பொதுமக்களுக்கு வழங்கும்போது பிரதான அலுவலகத்திற்கு தகவல்களை அனுப்பி மௌனம் காப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வதன் மூலம் பொதுமக்களுக்கு தமது சேவைகளை உடனடியாக வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.
மாவட்டத்தின் தொடர்பாடல் கட்டமைப்பை சீர்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த வசதிகள் தேவைப்படும் பகுதிகளை முறையாகக் கண்டறிந்து அந்த சேவையை வழங்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாடல் சேவைகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களினதும் பொறுப்பாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
சேதமடைந்த சுகாதாரத் துறை மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளை சீர்செய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், தம்புள்ளை வைத்தியசாலையை வேறொரு இடத்தில் நிறுவி, அதனை அதிக வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக மேம்படுத்தும் பரிந்துரை குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, இதற்கான முறையான திட்டத்தையும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் குறித்த தகவல்களையும் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மாவட்டத்தில் டிசம்பர் 16 ஆம் திகதி முடிந்தவரை பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்த ஜனாதிபதி, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களை அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்பதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். இதன்போது, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
மாவட்டத்தில் சேதமடைந்த நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அவசரமாக புனரமைத்தல், சேதமடைந்த பயிர்ச் செய்கை மற்றும் கால்நடை பண்ணைகளை மீண்டும் தொடங்குதல் மற்றும் அனர்த்தம் காரணமாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்குதல் குறித்தும் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கமகெதர திசாநாயக்க, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பி.எஸ்.ஜே. பியங்வில, தீப்தி வாசலகே, தினேஷ் ஹேமந்த உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மாகாண சபைத் தலைவர் எல்.டி. நிமலசிறி உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, மாத்தளை மாவட்டச் செயலாளர் எல்.பி. மதநாயக்க உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாத்தளை மாவட்டத்தின் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
