கண்டி மாவட்டத்தில் தூர பகுதிகளிலுள்ள பெருந்தோட்டங்களுக்கான விநியோகக் கட்டமைப்பு ஸ்தம்பிதமடைந்துள்ளதால் மக்கள் பரிதவிக்கின்றனர். எனவே, விநியோகக் கட்டமைப்பை சீர்செய்வதற்குரிய நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“பேரிடரால் கண்டி மாவட்டம் நிலைகுலைந்துள்ளது. அதுவும் பெருந்தோட்டப்பகுதிகளில் நிலைமை மோசம். கண்டி மாவட்டத்தில் நகர் பகுதி மற்றும் நகரை அண்டியுள்ள தோட்டப்பகுதிகளுக்குரிய விநியோகக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விடயம். இது விடயத்தில் தன்னார்வ அடிப்படையில் செயல்பட்ட அனைத்து மனிநேய செயல்பாட்டாளர்களுக்கும் பாராட்டுகள்.
அதேபோல கண்டி மாவட்டத்தில் தூர இடங்களில் உள்ள தோட்டப்பகுதிகளுக்குரிய விநியோகக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து என்பன தடைபட்டுள்ளன. குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. விநியோகக் கட்டமைப்பு இல்லாததால் அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதில்லை. போக்குவரத்து வசதி இல்லாததால் நிவாரண உதவிகளை முன்னெடுக்க செல்பவர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளுக்கு வரமுடியாத நிலையும் உள்ளது.
எனவே, விநியோகக் கட்டமைப்பை சீர்செய்து, போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பின பின்னர் நீண்டநாள் பிரச்சினைகள் பற்றி பேசி நிரந்தர தீர்வை நோக்கி பயணிக்கலாம். தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் உயிருக்கே முன்னுரிமை, முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.” எனவும் வேலுகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
