கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சால் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொறுப்புமிக்க பதவியில் உள்ள ஒரு அரசு வைத்திய அதிகாரியாக இருந்து கொண்டு, உரிய அனுமதி அல்லது ஒப்புதல் இன்றிப் பல்வேறு ஊடகங்களுக்கு கருத்துகள் மற்றும் அறிக்கைகள் வழங்கியதாக வைத்தியர் ருக்ஷான் பெல்லன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கருத்துகள் மற்றும் ஊடகப் பேச்சுகள், நாட்டில் சர்ச்சைக்குரிய சூழ்நிலையை உருவாக்கியதாகவும், பொதுமக்களிடையே அமைதியின்மை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய மற்றும் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.










