உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்க ஜப்பான் அரசு திட்டம்!

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜப்பானின் காஷிவாஸாகி – கரிவா அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்குவதற்கான இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் நிகாட்டா மாகாணத்தில் உள்ள காஷிவாஸாகி – கரிவா அணுமின் நிலையம் 8,212 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமாகும்.

கடந்த, 2011ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலால், புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள அணு உலை விபத்துக்குப் பின், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜப்பானில் உள்ள அனைத்து அணு உலைகளும் மூடப்பட்டன. இதன்படி, 2012ல் காஷிவாஸாகி – கரிவா அணுமின் நிலையமும் மூடப்பட்டது.

இந்நிலையில், இந்த அணு மின் நிலையத்தை மீண்டும் இயக்குவது தொடர்பான தீர்மானத்துக்கு, நிகாட்டா மாகாண சட்டசபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அணு உலை இயக்கத்திற்கு, அம்மாகாண கவர்னர் ஹிடேயோ ஹனசுமி ஏற்கனவே ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்போது சட்டசபையும் ஒப்புதல் அளித்திருப்பது, ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

புகுஷிமா அணுமின் நிலையத்தை இயக்கிய, ‘டெப்கோ’ எனப்படும், ‘டோக்கியோ எலக்ட்ரிக் பவர்’ நிறுவனம் தான் இந்த அணுமின் நிலையத்தையும் இயக்குகிறது.

புகுஷிமா விபத்துக்குப்பின் இந்நிறுவனம் அணு உலைகளை மீண்டும் இயக்குவது இதுவே முதல் முறையாகும். முதற்கட்டமாக அணுமின் நிலையத்தின் 6வது அணு உலை, அடுத்தாண்டு, ஜனவரி 20 ஆம் திகதி முதல் மீண்டும் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles