“மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் இந்திய வெளிவிவகார அமைச்சரை இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் கோரின. வெறும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தீர்வல்ல என்பதே எமது நிலைப்பாடு. தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி ஆட்சி முறைமைதான் தமிழ் மக்களின் அபிலாஷை.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பி. தெரிவித்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேசின.
இதில், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பங்கேற்றிருந்தார். இந்தச் சந்திப்பு தொடர்பிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் தமிழ்நாடு பயணம் தொடர்பிலும் விளக்கமளிக்கும் விதமாக அவர் கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். இதிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் வெறுமனே வந்து ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதை வலியுறுத்தியும்,13ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்தும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் பல தடவைகள் வலியுறுத்தியது 13ஆம் திருத்தம். ஆனால், இந்தியாவின் பிள்ளைதான் அந்த 13ஆவது திருத்தச் சட்டம். அதனைக் கைவிடுவதை இந்தியா விரும்பாது.
2009 மே மாதத்தில் போர் முடிவுக்கு வந்தபோது அப்போதிருந்த அரசு வெறுமனே பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே இருந்தது. அதனை இராணுவத் தீர்வின் மூலம் தீர்த்து விட்டோம். இலங்கையில் பிரச்சினை இல்லை எனக் கூறினார்கள். ஆனால், சர்வதேச சமூகம் அந்தக் கருத்தை நிராகரித்தது.
அத்துடன், விடுதலைப்புலிகளின் போர் 1970இல்தான் ஆரம்பமானது. ஆனால், 1948 ஆம் ஆண்டிலிருந்தே இனங்களுக்கிடையே முரண்பாடு உள்ளது. அன்றைய அரசமைப்பைத் தமிழ்த் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் சுட்டிக்காட்டினார்கள்.
பிரித்தானியாவில்கூட ஐரிஸ் மக்களுக்குப் பிரச்சினை அன்றிருந்தது. அவர்களுக்கு உரிய அரசமைப்பை ஏற்படுத்தி தீர்வு பெற்றுக்கொடுத்தனர். இந்தியா மூன்றாவது வல்லரசு. அவர்கள் பொருளாதாரத்திலும் எதிர்காலத்தில் இரண்டாவது வல்லரசு நாடாக வரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. இந்தியாவின் கருத்துக்களை மீறி மற்ற நாடுகள் எந்த முடிவையும் இலேசாக எடுக்க முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினையில் இந்தியா அக்கறை செலுத்தி 1987இல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
ஆகவே, இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியாவுக்குக் கடமை இருக்கின்றது. தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்தியாவுக்குக் கடமை இருக்கின்றது. இந்தியாவின் நலன் – பாதுகாப்பில்தான் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆகவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி ஆட்சி முறைமை மட்டும்தான் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷையைப் பூர்த்தி செய்யக்கூடியது. – எனவும் கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டார்.
