தேசிய மக்கள் சக்தியினர் மனசாட்சி பற்றி கதைப்பது நகைப்புக்குரிய விடயமாகும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபையில் உள்ள உறுப்பினர்கள் மனசாட்சியின் பிரகாரம் செயல்பட வேண்டும் என மாநகர மேயர் கோரிக்கை விடுத்திருந்தார்.
கொழும்பு மாநகரசபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்ட பின்னரே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முஜிபூர் ரஹ்மான் எம்.பி. கூறியவை வருமாறு,
“ புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தப்போவதாக கூறியே தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் இன்று வேறு விடயங்களே நடந்தேறிவருகின்றன.
எந்த ஆட்சியிலும் இடம்பெறாத வகையில் நபர்களை இலக்குவைத்து தாக்கும் – சேறுபூசும் அரசியலையே ஆளுங்கட்சியினர் முன்னெடுத்துவருகின்றனர். இதுதான் தேசிய மக்கள் சக்தியினர் கூறிய மாற்றமா?
மனசாட்சி குறித்தும் ஆளுங்கட்சியினர் கதைக்கின்றனர். ஆனால் உள்ளாட்சிசபைகளில் ஆட்சியமைப்பதற்காக எதிரணியில் உள்ள கட்சிகளின் ஆதரவு பெறப்பட்டுள்ளது.
மனசாட்சி இருந்திருந்தால் பிள்ளையானிடம் உதவி கோரப்பட்டிருக்குமா, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதின் ஆகியோரிடம் ஆட்சியமைக்க உதவி கோரப்பட்டிருக்குமா?
மொட்டு கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் உறுப்பினர்களிடம் ஆதரவு பெற்றப்பட்டிருக்குமா? ஆளுங்கட்சியினரிடம் மனசாட்சி இல்லை. அவர்கள் மனசாட்சி பற்றி பேசுவது நகைச்சுவைத்தனமாகும்.” – என்றார் முஜிபூர் ரஹ்மான்.
