கொழும்பு மாநகரசபையில் கூட்டு எதிரணி தமது பெரும்பான்மை பலத்தை இழக்கவில்லை. மக்களுக்காக கூட்டு எதிரணியாக தொடர்ந்து செயல்படுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் ரிசா சாருக் தெரிவித்தார்.
வரவு- செலவுத் திட்டம் முதல் தடவை தோற்கடிக்கப்பட்டபோது மனசாட்சி பற்றி கருத்து வெளியிட்ட மேயர், இன்று ஆளுங்கட்சிக்கு எவ்வாறு பெரும்பான்மை பலம் கிடைத்தது என்பது பற்றி தனது மனசாட்சியிடம் கேட்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ கூட்டு எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவர் பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களித்தார். முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு செயல்பட்டார்.
ஏனைய இரு உறுப்பினர்கள் காணாமல்போய் இருந்தனர். அவர்களது தொலைபேசிகூட இயங்கவில்லை. எனவே, என்ன நடந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.” – எனவும் அவர் கூறினார்.










