“ தையிட்டி திஸ்ஸ விகாரை சம்பந்தமாக நாம் மிகவும் நேர்மையாக செயல்பட்டு, பிரச்சினையை தீர்ப்பதற்கு முற்படுகின்றோம். எனினும், தமிழ் மக்களை குழப்புவதற்கு சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்.” – என்று அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பேரிடர் நிலைமையை முகாமை செய்வதற்காகவே அவசர கால சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இதன்மூலம் மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டது. மாறாக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
கடந்த காலங்களிலேயே பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகார சட்டம் என்பன முறைகேடாக பயன்படுத்தப்பட்டன.
தமிழ் மக்கள்மீது பொலிஸ் அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது என சிறிதரன் எம்.பி. குற்றஞ்சாட்டினார். அவ்வாறு எவ்வித அராஜகமும் கிடையாது.
வடக்குக்கு சென்று மக்களிடம் கேட்டால், அராஜக நிலைமையை ஏற்படுத்துவது யாரென்பது தெரியவரும்.
தையிட்டி திஸ்ஸ விகாரை சம்பந்தமாக நாம் மிகவும் நேர்மையாக செயல்பட்டு, பிரச்சினையை தீர்ப்பதற்கு முற்படுகின்றோம்.
வடக்கில் கடந்த காலங்களில் மோசடிகள் இடம்பெற்றன. அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இதனால் சில அரசியல் வாதிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் தமது இருப்பு இல்லாமல் ஆகிவிடும் என்ற அச்சத்தாலேயே தமிழர்களை குழப்புகின்றனர்.










