நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்குரிய சட்டமூலம் என பெயரிடப்பட்டுள்ள மேற்படி சட்டமூலத்தை நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார முன்வைத்தார்.
மேற்படி சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடுவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படும்.
உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் வழங்கப்பட்ட பின்னர், அந்த வழிகாட்டலுக்கமைய சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும்.
முன்னாள் எம்.பிக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இரத்து செய்யப்படும் என்பதுடன், தற்போதுள்ள எம்.பிக்களுக்கு எதிர்காலத்தில் ஓய்வூதியம் பெறாத வகையில் ஏற்பாடு இடம்பெற்றுள்ளது.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் அண்மையில் இல்லாது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
