பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதியளவிலேயே கையளிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை நேற்று முன்தினம் 9 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கவே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டிருந்தது.
இதனையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்தும் திரட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏனைய சில பாடங்களிலும் உள்ள சிக்கல்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என அறியமுடிகின்றது.
எனவே, இதுகுறித்த தகவல்களையும் சேகரித்து காத்திரமானதொரு பிரேரணையை முன்வைக்கும் நோக்கிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை தாமதிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
தரம் ஆறு ஆங்கில பாடத்தில் வயது வந்தோர் வலைத்தளத்திற்கான இணைய இணைப்பு சேர்க்கப்பட்ட விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதனை மையப்படுத்தியதாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்குரிய ஏற்பாடு இடம்பெறுகின்றது.
எனினும், கல்வி மறுசீரமைப்பை சீர்குலைப்பதற்கான எதிரணிகளின் சதி நடவடிக்கை இதுவென நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆளுங்கட்சி கருத்து வெளியிட்டுள்ளது.
ஜனவரி மாதத்துக்குரிய இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.










