ஈரானின் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றது.
இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள அமெரிக்கா, அடக்குமுறையை நிறுத்தாவிட்டால் ஈரானுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கத்தாரிலுள்ள தமது படை தளத்தில் இருந்து பணியாளர்களை அமெரிக்கா மீள அழைத்துள்ளது. இதனால் ஈரான்மீது இராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஈரான்மீதான இராணுவ நடவடிக்கைக்கு சவூதி, கட்டார் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.
ஈரான் நாட்டில் அயோதுல்லா அலி காமேனி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில், நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 18-வது நாளாக நீடித்து வருகிறது போராட்டம்.
ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3,428 பேர் பலியாகி உள்ளனர் என நார்வே நாட்டை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்து உள்ளது.
அவர்கள் ஈரான் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டவர்கள் என்றும் தெரிவித்து உள்ளது.
போராட்டக்காரர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
