நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 48 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அதிரடியாக துடுப்பெடுத்தாடினர்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முன்னதாக இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இதில் 2-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வென்றது.
இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தற்போது பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளன.
இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 238 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ஓட்டங்கள் விளாசினார். ரிங்கு சிங் 44, சூர்யகுமார் யாதவ் 32 மற்றும் ஹர்திக் பாண்டியா 25 ஓட்டங்களைப் பெற்றனர்.
239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 48 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
