மஸ்கெலியா, காட்மோர் தோட்டத் தொழிலாளர்களுக்கான சேவைகால கொடுப்பனவை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் இழுத்தடிப்பு செய்துவருகின்றது. இன்று (4) நடைபெற்ற கலந்துரையாடலிலும் இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
காட்மோர் தனியார் தோட்டத்தின் நிர்வாகம் மற்றுமொரு தரப்புக்கு கைமாற்றப்பட்டுள்ள நிலையில், தமக்கான சேவைகால கொடுப்பனவை முன்னைய நிர்வாகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 28 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இது தொடர்பில் மலையக தொழிற்சங்கங்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று ஹட்டன் உதவித் தொழில் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் சார்பில், பாரத் அருள்சாமி கலந்துகொண்டார். அத்துடன், இ.தொ.காவின் தோட்ட இயக்குனர் ராஜராம், காட் மோர் தோட்டத்தின் தற்போதைய தோட்ட உரிமையாளர், புதிதாக நிர்வாகத்தை பொறுப்பேற்கவுள்ள நிர்வானத்தினரும் கலந்துகொண்டிருந்தனர். ஏனைய தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இச்சந்திப்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதனையடுத்து தோட்ட உரிமையாளர், சேவைக்கால நிதியை வழங்க ஏனைய பங்குதாரர்களுடன் பேச வேண்டுமென கால அவகாசம் கோரினார். அடுத்தவாரம் நடைபெறவுள்ள மற்றுமொரு கலந்துரையாடலில் அதற்கான தீர்வு எட்டப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் உறுதியாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
” நாம் கொடுத்த அழுத்தத்தின் பிரகாரம் எதிர்வரும் 8ஆம் திகதி தொழிலாளர்களுக்கு சம்பளத்தையும் போனஸ் கொடுப்பனவை வழங்கவும் தோட்ட நிர்வாகம் இணக்கம் வெளியிட்டுள்ளது. அடுத்தப் பேச்சுவார்த்தையில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும்.” – என்று சந்திப்பின் பின்னர் பாரத் அருள்சாமி கருத்து வெளியிட்டுள்ளார்.
க.கிசாந்தன்
