எல்ஜின் தோட்ட மக்களின் எதிர்காலம்?

 பி.கேதீஸ்

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட எல்ஜின் தோட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் 28 ம் திகதி நாட்டில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக எல்ஜின் மலை உச்சியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலை உச்சியின் அடிவாரத்தில் காணப்பட்ட 26 தனி குடியிருப்புகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டதையடுத்து நுவரெலியா பிரதேச செயலகத்தினூடாக சுமார் 26 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு எல்ஜின் தோட்டா சகாய மாதா தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் பின்னர், அவ்விடத்தில் பாரிய ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்கின்றனர். இவர்களை மீண்டும் தமது குடியிருப்புகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இருந்தபோதிலும் தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட பரிசோதனையில் தாங்களுக்கு நம்பிக்கை இல்லையெனவும் மீண்டும் அவ்விடத்திற்கு சென்று குடியேற முடியாது எனவும் தமது பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அதுவரை இந்த முகாமிலிருந்து வெளியேற மாட்டோம் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

சகாயமாதா தேவாலயத்தில் தங்கியிருக்கும் லிந்துலை எல்ஜின் தோட்டத்தைச் சேர்ந்த தேவி என்ற பெண் தெரிவிக்கையில்

நாங்கள் 2025 நவம்பர் மாத இறுதியில் நாட்டில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்டோம். அன்றிலிருந்து இன்றுவரை எங்க தோட்டத்தில் காணப்படும் சகாயமாதா கிறிஸ்தவ தேவாலயத்திலேயே தங்கியிருக்கின்றோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை.

தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெடிப்புக்கள் ஏற்பட்ட இடங்களில் பரிசோதனைகளை மேற்கொண்டு சென்றார்கள். அவர்களின் பரிசோதனைகளுக்கிணங்க அவ்விடத்தில் எவ்வித ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லையென தெரிவிக்கின்றனர். எங்களுடைய வீடுகளுக்கே சென்று அங்கேயே வாழும்படி அவர்கள் கூறுகின்றனர்.

அதிக மழை பெய்தால் அங்கிருந்து இந்த தேவாலயத்துக்கே வந்துவிடுமாறும் கூறுகின்றனர். எங்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்கின்றார்கள். இங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இங்கு இருப்பதற்கு மிகவும் கஸ்டமாக இருக்கின்றது.இந்த அரசாங்கம் எங்களின் பிரச்சினைகளை கண்டறிந்து உதவ முன்வர வேண்டும்.

சகாயமாதா தேவாலயத்தில் தங்கியிருக்கும் லிந்துலை எல்ஜின் தோட்டத்தைச் சேர்ந்த திரேசாம்மாள் தெரிவிக்கையில்

கடந்த வருடம் நவம்பர் மாதம் 28ம் திகதியிலிருந்து இத்தேவாலயத்தில் தங்கி இருக்கின்றோம். மார்கழி பனி அதிகமாக பொழிகின்றது. இத்தேவாலயத்தினுள் எங்களால் இருக்கவே முடியவில்லை. இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை. இங்கே எங்களோடு தங்கியிருந்த முதியவர் ஒருவர் குளிர் தாங்கிக் கொள்ள முடியாமல் இறந்தே போய்விட்டார். இதற்கு இந்த அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும். இதேபோல இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ தெரியவில்லை.

எங்களுக்கு இங்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. எல்லா அரசியல் வாதிகளும் இங்கே வருகின்றார்கள் எங்களை பார்வையிட்டு செல்கின்றனர். ஆனால் யாருமே உதவி செய்வதாக இல்லை. அனுதாபம் மட்டுமே தெரிவிக்கின்றனர். நாங்களும் வீடு, வாசல் என வசதியாகவே வாழ்ந்தவர்கள். இந்த அனர்த்தத்தால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டோம். ஜனாதிபதி அவர்கள் எங்களுக்கு ஒரு காணியோ வழங்கவோ அல்லது வீடுகளை கட்டித்தரவோ முன்வரவேண்டும். நாங்கள் கௌரவ ஜனாதிபதியையே நம்பி இருக்கின்றோம்.

சகாயமாதா தேவாலயத்தில் தங்கியிருக்கும் லிந்துலை எல்ஜின் தோட்டத்தைச் சேர்ந்த வாசுதேவன் தெரிவிக்கையில்

இந்த முகாமில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் இருக் கின்றோம். ஒரு மாதத்திற்கு முன்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினர் இங்கு பரிசோதனை மேற்கொண்டனர்.அதன் பின்னர் மறுபடியும் கடந்த வாரமும் அவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர். மேற்கொண்ட பரிசோதனைகளுக்கு ஏற்ப அவ்விடத்தில் பாரிய மண்சரிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் எங்களை மீண்டும் அவ்விடத்திற்கே செல்லுமாறும் கூறுகின்றனர். அதாவது நாங்கள் வாழ்ந்த வீடுகளுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்கின்றனர்.

அங்கே மீண்டும் எவ்வித ஆபத்தும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர். இந்த வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டமைக்கான காரணங்கள் இந்த வீடுகள் கட்டும்போது ஒழுங்கான முறையோடு அடித்தளம் இடவில்லை என கூறுகின்றனர். அந்த வீடுகளிலே தற்போது பயம் இல்லாமல் வசிக்கலாம் என்கின்றனர். எங்களுக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். நாங்கள் உயிர் அச்சுறுத்தலுடனே வாழ்கின்றோம். அவ்விடத்திலுள்ள 26 வீடுகளிலும் பாரிய அளவில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

நாங்கள் வேறு யாருடைய வீடுகளிலோ அல்லது உறவினர்களின் வீடுகளிலோ தங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆரம்பத்தில் அரசாங்கத் தினூடாகவும் நிவாரணங்கள் கிடைக்கப்பெற்றன, ஆனால் இப்போது ஏதும் கிடைப்பதே இல்லை. நாங்கள் எங்களுடைய தொழிலையும் இழந்தே தவிக்கின்றோம்.75 மில்லிலீற்றர் -150 மில்லிமீற்றர்க்கும் அதிகமாக மழைபெய்தால் அவ்வீடுகளிலிருந்து உடனடியாக வெளியேறி இந்த தேவாலயத்திற்கு வந்து தங்குமாறு நுவரெலியா பிரதேச செயலக அதிகாரிகளும் தோட்ட அதிகாரியும் தெரிவிக்கின்றனர்.

தோட்ட நிர்வாகமும் எங்களை கண்டுக்கொள்வதே இல்லை, எனவே மழை அதிதமாக பெய்தால் வீடுகளிலிருந்து உடனே வெளியேறுங்கள் என்கின்றனர். கடுமையாக மழைபெய்யும் போது. எங்களுடைய சின்னஞ் சிறிய பிள்ளைகளை வைத்துக்கொண்டு எங்கே செல்வது.? சொல்லும் அதிகாரிகளுக்கு ஒரு நியாயம் வேண்டாமா? அதிக மழைபெய்தால் எங்களுடைய வீடுகள் எல்லாம் மண்ணுக்குள் புதையக்கூடிய ஆபத்தில் இருக்கின்றன. முடிவை தரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம். எனவே இந்த அரசாங்கம் ஒரு நல்ல முடிவை எங்களுக்கு தரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம். எங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது இந்த அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும்.

சகாயமாதா தேவாலயத்தில் தங்கியிருக்கும் லிந்துலை எல்ஜின் தோட்டத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் தெரிவிக்கையில்

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இதே எல்ஜின் தோட்டத்தில் தான். எனக்கு இப்போது 75 வயதாகின்றது.இதுவரை இவ்வாறானதொரு அனர்த்தத்தை பார்த்ததுவுமில்லை.எங்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டிருந்த 26 வீடுகளுமே பாரிய வெடிப்புக்குள்ளாகி இருக்கின்றன. தரையிலிருந்து சுவர் வரை பாரிய வெடிப்புக்குள்ளாகி இருக்கின்றன. எங்கள் தோட்ட அதிகாரி கூறுகின்றார். மேலே உள்ள மலையியிருந்து கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட பாரிய மணிசரிவு பாதியிலே நின்றுவிட்டது. இனி அந்த மண்மேடு சரிந்து வருவதற்கு வாய்ப்பில்லை என்கின்றார்.

எங்கள் தோட்ட அதிகாரி என்ன கடவுளா? என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே கணித்து விடுவாரோ? கிராம சேவகர் இந்த பக்கமே வருவதே இல்லை. எங்களுடைய பிரச்சினை தொடர்பாக அவருக்கு எதுவும் தெரியாதது போலவே இருக்கின்றார். எந்த ஒரு நிவாரணப் பொருட்களும் இதுவரை கிடைக்கவே இல்லை. ஒரு தடவை மாத்திரம் நிவாரணப் பொருட்கள் பிரதேச செயலகத்தினூடாக கொடுத்தார்கள். அதன் பிறகு எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. எங்களுக்கு தொடர்ச்சியாக இந்த தேவாலயத்திலேயே தங்க இயலாது. இரவிலே இங்கு தூங்கவே முடியவில்லை. அதிக பனி பொழிகின்றது.

எனக்கு வயது 75 வயது என்னால் குளிர்தாங்க முடியவில்லை.எங்களுடன் சின்ன சின்ன பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த குளிரில் இரவில் இருக்க முடியவில்லை. அடிக்கடி காய்ச்சல் மற்றும் சலி தொல்லைக்குள்ளாகின்றனர். கடந்த வாரம் ஒகஸ்டின் என்பவர் கடுங் குளிர் தாங்க முடியாமல் இந்த முகாமிலே இறந்துவிட்டார். அவர் இறந்தது கூட ஏன் என்ன காரணத்தினால் இறந்தார் என்பதை கூட இந்த அரசாங்கம் கண்டுக்கொள்ள வில்லை.

இந்த அரசாங்கத்தையும் இந்த ஜனாதிபதியையும் நம்பி நாங்கள் இருக்கின்றோம். எங்களுக்கு நல்ல இடத்தில் வீடுகளை கட்டித்தாருங்கள் இல்லையென்றால் காணிகளை தாருங்கள். நாங்கள் வீடுகளை கட்டிக் கொள்கின்றோம் என்றார். எங்களுக்கு தொழிலுக்கு போகவும் வழி கிடையாது. அதிக கஸ்டத்தின் மத்தியிலேயே இங்கு வாழ்கின்றோம். இந்த இடத்தில் மலகூடமும் இல்லை. குடிநீரும் இல்லை. ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் சென்றுதான் தண்ணீரை வாளிகளிலும் குஞங்களிலும் சுமந்து வருகின்றோம். மலசலகூடம் இல்லாமையால் கீழே உள்ள உறவினர்களின் வீடுகளுக்கே செல்கின்றோம் என்றார்.

சகாயமாதா தேவாலயத்தில் தங்கியிருக்கும் லிந்துலை எல்ஜின் தோட்டத்தைச் சேர்ந்த உத்தரியமேரி தெரிவிக்கையில்

அக்கரப்பத்தனை பிரதேசத்துக்குட்பட்ட எல்ஜின் தோட்டத்திலேயே வசிக்கின்றோம். இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த முகாமில் தங்கியி ருக்கின்றோம். பாரிய சிரமத்துக்கு மத்தியிலேயே இந்த தேவலயத்திலே இருக்கின்றோம். மலசல கூடம் இல்லை, குடிநீர் இல்லை, எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆரம்பத்தில் எங்களுக்கு நிவாரணங்கள் கிடைத்தன. ஆனால் இப்போது எதுவும் கிடைப்பதில்லை. சின்ன பிள்ளைகளை வைத்துக்கொண்டு இவ்விடத்திலே தொடர்ந்தும் இருக்க முடியாது இரவில் பனி தொல்லை அதிகமாக இருக்கின்றது. கடும் குளிரான காலநிலை நிலவுகின்றது. எனவே எங்களின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த அரசாங்கம் எங்களுக்கு வீடுகளை அமைத்து தரவேண்டும்.

தலவாக்கலை குறூப் நிருபர் பி.கேதீஸ்

Related Articles

Latest Articles