இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்ச் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
கடந்த ஒரு வாரகாலமாக வடக்கு மாகாணத்தில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புகளை மேற்கொண்டு வரும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி, இன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை தமிழ்த் தேசியப் பேரவையின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
யாழ்ப்பாணம் – தாவடிப் பகுதியில் அமைந்துள்ள ‘பொக்ஸ்’ விருந்தினர் விடுதியில் இச்சந்திப்பு நடைபெற்றது.
தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் செல்வராசா கஜேந்திரன், பொ.ஐங்கரநேசன் , தருமலிங்கம் சுரேஷ் , நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது வடக்கின் தற்போதைய நிலைமைகள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன என்று தெரியவருகிறது.










