“அரிசி, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். எனவே, தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும்” என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக வலியுறுத்தினார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நாடாளுமன்றம் கூடிய போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் நாள்களில் தமிழ் – சிங்களப் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. இவ்வாறான பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக நாட்டு மக்கள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாமல் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறிப்பாக அரிசி, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான விலைகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளன. இவ்வாறான சூழலில் அரசாங்கம் மௌனம் காக்கக் கூடாது. நாட்டு மக்களின் பக்கம் நின்று சிந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும், மக்களுக்குக் சலுகை விலையில் பொருள்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.” – என்றும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.










