நாட்டில் எரிபொருள் விலையேற்றம் குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடு நிலவுகின்ற கால கட்டத்தில் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்கள் மத்தியில் சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து ஒத்துழைக்க வேண்டியது உள்ளூராட்சி மன்றங்களின் கடமையாகும் என நேற்று (7) கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் மாதாந்த அமர்வில் விசேட உரையாற்றும்போது தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்,
” மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் யுத்த சூழலில் இலங்கை உட்பட உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதோடு, வறட்சி காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின்சார உற்பத்தியும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, அவற்றை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிகழ்நிலை ஊடாக (Zoom) அறிவுறுத்தல் வழங்கியுள்ளதோடு, சுற்றுநிருபத்தையும் அனுப்பி வைத்துள்ளது.
எனவே, கொட்டகலை பிரதேச எல்லையில் உள்ள வீதி விளக்குகளை அனாவசியமாக ஒளிர விடாமல் குறிப்பிட்ட நேரத்தில் அணைத்து விடவும், கடைகள், சிற்றுண்டிச்சாலைகள், வைபவங்களில் மின்சார பாவனையைக் குறைத்துக் கொள்ளவும் சகல உறுப்பினர்களும் கவனம் செலுத்துவது அவசியமாகும். மேலும், உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைய, நகரில் போதைப் பொருட்களுடன் சம்பந்தப்பட்ட சட்ட விரோதமான பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தித்வா புயலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 86 மில்லியன் ரூபா கொட்டகலை பிரதேச சபைக்கு தேவைப்படுகின்ற போதிலும் அரசாங்கம் இதுவரை 42 மில்லியன் ரூபாவை மாத்திரமே வழங்கியுள்ளது. எஞ்சிய தொகையையும் பெற்றுக் கொள்ள முயற்சித்து வருகின்றோம். எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதால் தகனசாலையின் கட்டணத்திலும் கணிசமான தொகையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
கொட்டகலை பொது மைதானத்தை தனியார் நிறுவனம் ஒன்று பராமரிக்க முன்வந்தாலும் அதன் சகல நிர்வாகப் பொறுப்பும் பிரதேச சபைக்கும், உறுப்பினர்களுக்கும் இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அத்தோடு, இந்த வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் “பிரதேச சபைத் தலைவர் வெற்றிக் கிண்ணத்துக்கான” கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொட்டகலை பிதேச சபைக்கு உட்பட்ட 10 வட்டரங்களிலுமிருந்து தலா 4 குழுக்கள் வீதம் பங்கு பற்ற முடியும். இலட்சக் கணக்கான ரூபா பணப்பரிசிலும் வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 11 ஆந் திகதி ஆரம்பமாகவுள்ள நிகழ்வுக்கு, முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளார்கள். 12 ஆந் திகதி பரிசளிப்பு விழா இடம்பெறும். இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியை எதிர்காலத்தில் யார் பதவிக்கு வந்தாலும் இடை நிறுத்தாது தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு சகல உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்கி இளைஞர்களின் விளயாட்டு முயற்சியை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.










