சபாநாயகரை சந்தித்தார் கியூபா தூதுவர்!

கியூப குடியரசின் இலங்கைக்கான தூதுவர் பட்ரீஷிலா லசாரா பெரோ குவேரா, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் 65 வருடங்களுக்கு மேலாக நீடித்துவரும் நெருக்கமான, வலுவான உறவுகளை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இலங்கைக்கான கியூப தூதுவராக நியமிக்கப்பட்டமைக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகளை நினைவு கூர்ந்தார். கியூபாவின் தலைவர்களான ஃபிடெல் கஸ்ட்ரோ மற்றும் சேகுவாரா ஆகியோருக்கு தனது மரியாதையைச் செலுத்திய அவர், சர்வதேச ஒற்றுமையை வலுப்படுத்துவதில்
ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தொடர்ச்சியான அமர்வுகள் உள்ளிட்ட பல்தரப்புத் தளங்களில் கியூபா இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுகளுக்கும் சபாநாயகர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

கியூபாவின் மேம்பட்ட மருத்துவத் துறையை அவர் பாராட்டியதுடன், தாம் மருத்துவ மாணவராக இருந்த காலத்தில் இலங்கையில் பணியாற்றிய கியூபா நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் மிகுந்த அர்ப்பணிப்பும் மனிதநேயமும் கொண்டு சேவையாற்றிய தனிப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இலங்கையில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு வழங்கிய உதவிக்கு கியூபா அரசாங்கத்துக்கு சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், கியூபாவில் காணப்படும் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களுக்கான அணுகுமுறையின் ஊடாக இலங்கையின் சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்யத் தொடர்ந்தும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன்> இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என்றார்.

இலங்கைக்கு கியூபா தொடர்ந்து வழங்கி வரும் நிலையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய கியூப தூதுவர், தித்வா சூறாவளியின் தாக்கத்தை தாக்கத்தைக் குறைப்பதில் இலங்கை அரசு மேற்கொண்ட பயனுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட ஆட்சிமுறை முயற்சிகளைப் பாராட்டினார்.

இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத் தூதுக் குழுவுடன் கியூபாவுக்கு விஜயத்தை மேற்கொள்ளுமாறும் அவர், சபாநாயகருக்கு அழைப்பு விடுத்தார்.

கியூபாவினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்கள், விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்கான ஒத்துழைப்புக்கள், பரஸ்பர நன்மை அளிக்கும் வகையில் பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

Related Articles

Latest Articles