செம்மணியில் இதுவரை 260 எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, நேற்று சிறுவன் ஒருவனுடையது எனச் சந்தேகிக்கப்படும் மனித என்புத் தொகுதி ஒன்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் மூலம் அங்கு இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 260 ஆக உயர்வடைந்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 11ஆம் நாள் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றன.

இதன்போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த என்புத் தொகுதிகளில் இருந்து இரண்டு முழுமையான மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்து இதுவரை மொத்தம் 260 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் இருந்து 256 மனித என்புத் தொகுதிகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடங்கிய கடந்த 11 நாள்களில் மட்டும் 17 மனித என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று மதிய வேளையில் பெய்த கடும் மழை காரணமாக அகழ்வுப் பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது.

அகழ்வுக் குழிகளுக்குள் மழைநீர் தேங்கிய நிலையில், நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான கழிவுநீர் அகற்றும் பவுசர்கள் வரவழைக்கப்பட்டு, நீர் உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. அதன் பின்னரே மாலை வேளையில் பணிகள் தொடர்ந்தன.

இன்று சனிக்கிழமை என்பதால் அரை நாள் மட்டுமே அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எனினும், மழையுடனான காலநிலை தொடருமானால் இன்றைய அகழ்வுப் பணிகள் பாதிக்கப்படக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

Related Articles

Latest Articles