யாழ். போதனா தீ விபத்து: மீட்சிப் பணிகள் தீவிரம்!

யாழ். போதனா தீ விபத்து:
மீட்சிப் பணிகள் தீவிரம்!

9 பாரவூர்திகளில் மருந்துகளை ஏற்றிவரத் துரித ஏற்பாடு
நோயாளர் சேவைகள் பாதிக்கப்படாது என்று அறிவிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீ விபத்தால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வகையில், உடனடியாக 9 பாரவூர்திகளில் அத்தியாவசிய மருந்துகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் மருந்துகள் அழிவடைந்த போதிலும், வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கான எந்தவொரு சேவையும் பாதிக்கப்படாது என்று பணிப்பாளர் உறுதியளித்தார்.

மருத்துவ சேவைகளைத் தடையின்றித் தொடர்வதற்கான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து 3 பாரவூர்திகள் கொழும்பு நோக்கிப் பயணமாகி மருந்துகளை ஏற்றிவரவுள்ளன.

அதேவேளை, கொழும்பிலுள்ள மத்திய மருந்தகக் களஞ்சியத்திலிருந்து 5 பாரவூர்திகளில் மருந்துகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

அனுராதபுரம் வைத்தியசாலையிலிருந்து ஒரு பாரவூர்தி மூலம் அவசர மருந்து விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மொத்தம் 9 பாரவூர்திகளில் தேவையான அனைத்து வகை மருந்துகளும் எதிர்வரும் 4 நாள்களுக்குள் யாழ். போதனா வைத்தியசாலையை வந்தடையும் என்று பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை, இந்தத் தீ விபத்துக்கான உண்மையான காரணம் என்ன? மற்றும் இதனால் ஏற்பட்டுள்ள நிதி ரீதியான இழப்பு எவ்வளவு? என்பது குறித்து ஆராய்வதற்காக மத்திய சுகாதார அமைச்சிலிருந்து விசேட விசாரணைக் குழுவொன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்க மத்திய சுகாதார அமைச்சு மற்றும் பிராந்திய வைத்தியசாலைகள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles