நுவரெலியா மாவட்ட நழிவுற்ற சமூகத்தை மேன்மைப்படுத்தும் அமைப்பின் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கான அரச சேவைகள் குறித்த விழிப்புணர்வு பாதயாத்திரையும் வீதி நாடகமும் இன்று (19) நுவரெலியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
அரசினால் வழங்கப்படும் ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டம், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், மற்றும் ஈ.பி.எஃப் (EPF), ஈ.டி.எஃப் (ETF) ஆகிய சேவைகளை பொதுமக்கள் எவ்வாறு எளிய முறையில் பெற்றுக்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாடகத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிகழ்வு நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இருந்து பாதயாத்திரையாகத் தொடங்கப்பட்டது. அங்கிருந்து நுவரெலியா பிரதான வீதி வழியாகப் பயணித்த விழிப்புணர்வுப் பேரணி, தபால் நிலையத்திற்கு முன்னாலுள்ள சுற்றுவட்டத்தை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து, தபால் நிலையத்திற்கு முன்பாக விழிப்புணர்வு வீதி நாடகம் பொதுமக்களுக்காக அரங்கேற்றப்பட்டது.
அரசினால் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளையும் சேவைகளையும் கிராம உத்தியோகத்தர் (கிராம சேவகர்) ஊடாக எவ்வாறு முறையாகப் பெற்றுக்கொள்வது என்பது குறித்து இந்நாடகத்தின் மூலம் மக்களுக்கு மிகத் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், நலன் விரும்பிகள் மற்றும் இதுவரை ‘அஸ்வெசும’ கொடுப்பனவு கிடைக்கப் பெறாத பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி ஆக்கம்: கஜரூபன் திவ்யா










