பலாக்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய முதியவர் ஒருவர், கால் வழுக்கி அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்சீக் தோட்டத்தின் ராணி பிரிவில் இன்று (மே 20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் அதே தோட்டத்தைச் சேர்ந்த முத்துராமன் கிருஷ்ணசாமி (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் கூறுகையில்:
” உயிரிழந்த முதியவர் தோட்டத்தில் தனது வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அதன் பின்னர், தனது விவசாய நிலத்தில் உள்ள பலா மரத்தில் பலாக்காய் பறிப்பதற்காக அவர் மரத்தில் ஏறியுள்ளார். இதன்போது எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து கால் வழுக்கி, மரத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கிணற்றுக்குள் விழுந்து அவர் உயிரிழந்துள்ளார்.”
உயிரிழந்தவரின் சடலம் தற்போது டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை (வியாழக்கிழமை) காலை கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை (Post-mortem) நடத்தப்பட்ட பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இச்சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.










