மழை அதிகரிக்கும் சாத்தியம்!

தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் படிப்படியாக நிலைபெற்று வருவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இப்பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Latest Articles