கட்சி மாறினால் எம்.பி. பதவி ரத்து: விரைவில் வருகிறது சட்டமூலம்!

நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளிலிருந்து எவரொருவரையும் அரசில் இணைத்துக் கொள்ளும் எண்ணமோ அல்லது எதிர்பார்ப்போ எமக்கு இல்லை என்று தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மக்கள் ஆணைக்கு முரணான வகையில் கட்சி மாறுபவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையை உடனடியாக இரத்துச் செய்வதற்கான புதிய சட்டமூலம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தற்போதைய அரசின் பொருளாதார முகாமைத்துவம் மற்றும் நிதிக் கொள்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினரால் ஆங்காங்கு பல்வேறு விமர்சனங்களும் சில கருத்துக்களும் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருகின்றன.

அதேநேரம், தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக எதிர்க்கட்சிகளிலிருந்து சில முக்கிய உறுப்பினர்களை தற்போதைய அரசில் இணைத்துக்கொள்வதற்கான இரகசியப் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இந்த நாட்டு மக்கள் மிகத் தெளிவானதொரு புதிய நாடாளுமன்றத்தை முறைப்படி நியமித்திருந்தனர். அதன்போது, தற்போதைய ஆளுங்கட்சிக்கு மாத்திரம் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் பேராதரவுடன் தெரிவு செய்து பலமான ஆட்சியை வழங்கினர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தூய்மையான மக்கள் ஆணையை நாம் எப்போதும் முழுமையாக மதிக்கின்றோம். எனவே, நாடாளுமன்றத்தில் தவித்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளிலிருந்து எவரொருவரையும் எமது அரச தரப்பில் இணைத்துக்கொள்வதற்கு நாம் எவ்விதத்திலும் எதிர்பார்க்கவுமில்லை. அதற்குத் துளியேனும் விரும்பவுமில்லை என்பதை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்கின்றோம்.

அரசில் எப்படியாவது இணைந்துவிடலாம் என அவர்களது தரப்பில் அவ்வாறான சில கனவுகள் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், மக்கள் பலத்துடன் இயங்கும் எமது அரசுக்கு அவ்வாறு எவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டிய எந்தவொரு அவசியமோ அல்லது எதிர்பார்ப்போ கிடையாது.

அது மாத்திரமன்றி, தங்களுக்கு வாக்களித்த மக்களின் ஆணைக்கு முற்றிலும் முரணான வகையில் சுயநலத்துக்காகக் கட்சி மாறுபவர்கள் தொடர்பில், அவர்களது நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கான புதிய சட்டமூலத்தை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக்க எதிர்பார்த்துள்ளோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles