நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (27ஆம் திகதி) பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகின்றது.
ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, நானுஓயா, பூண்டுலோயா உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழையுடன் அடர்ந்த பனிமூட்டமும் நிலவுவதால் பொதுமக்களும் சாரதிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தொடர்ச்சியான மழை காரணமாகப் பல இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவு அபாயங்கள் உருவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, மலைச்சரிவுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை, ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளில் கடும் மழையுடன் பனிமூட்டமும் காணப்படுவதால் வாகனப் போக்குவரத்து மந்தமடைந்துள்ளது. வீதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதுடன், சில பகுதிகளில் வீதி தெளிவாகத் தெரியாத (பார்வைத்திறன் குறைந்த) நிலையும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மழைநீரால் வீதிகள் வழுக்கலாகக் காணப்படுவதால் பல சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, மழை காரணமாக கொட்டகலை கொமர்சல் பகுதியில் இன்று மாலை வேன் ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதன்காரணமாகச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும், குறிப்பாக இரவு நேரங்களில் வேகக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், வாகனங்களின் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டபடி பயணிக்குமாறும், அவசர தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியான மழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கும் அபாயமும் காணப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.










