இலங்கையின் தனியார் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சிறுதேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) கட்டாய உழைப்புக்கான (Forced labour) பல குறிகாட்டிகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்குக் கடுமையான உழைப்புச் சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேநேரம், நாட்டின் கடுமையான தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களின் பலன்களும் இவர்களுக்கு மறுக்கப்பட்டு வருவதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள தொழிலாளர்களின் அவல நிலையை ஆவணப்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கை, ஓரங்கட்டப்பட்ட மலையகத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், உடல்ரீதியான வன்முறைகள், துன்புறுத்தல்கள், கடன் அடிமைத்தனம் (Debt bondage), நடமாட்டக் கட்டுப்பாடுகள் மற்றும் மோசமான வேலை, வாழ்க்கைச் சூழல் உள்ளிட்ட பல வடிவங்களிலான பரவலான துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
ILO அமைப்பின் உறுப்பு நாடு என்ற வகையிலும், அதன் 44 உடன்படிக்கைகள் மற்றும் ஐநா மனித உரிமைகள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள நாடு என்ற வகையிலும், தொழிலாளர்களைப் பாகுபாடு மற்றும் மனித உரிமை மீறல்களிலிருந்து பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது.
இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் ஸ்மிருதி சிங் (Smriti Singh) கருத்துத் தெரிவிக்கையில்:
“இலங்கையின் தனியார் தேயிலைத் தோட்டங்கள் மலையகத் தமிழ் தொழிலாளர்களை நடத்தும் விடயத்தில் எந்தவித பொறுப்புக்கூறலும் இன்றி முறையான வகையில் தொழிலாளர் சட்டங்களை மீறி வருகின்றன. நாங்கள் பார்வையிட்ட அனைத்து இடங்களிலும் தொழிலாளர்கள் வன்முறை, கடன் அடிமைத்தனம், ஊதியம் நிறுத்தி வைக்கப்படுதல், மோசமான வாழ்க்கை மற்றும் பணிச்சூழல் உள்ளிட்ட தொடர்ச்சியான பாகுபாடுகளைப் பகிர்ந்துள்ளனர்.
இது கட்டாய உழைப்பு (Forced labour) குறித்த தீவிரமான கவலைகளை எழுப்புகிறது. தற்போதுள்ள சட்டப் பாதுகாப்புகள் இருந்தபோதிலும் இந்தத் துஷ்பிரயோகங்கள் தொடர்வது, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசங்கம் கொண்டுள்ள பாரதூரமான தோல்வியையே காட்டுகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், கட்டாய உழைப்பை ஒழிப்பதற்கான இலங்கையின் கடப்பாடு உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களின் கீழ் மிகத் தெளிவானது. எனவே, அதிகாரிகள் உடனடியாக இந்தத் தோட்டங்களைப் பரிசோதித்து, தொழிலாளர் உரிமை மீறல்களின் அளவைக் கண்டறிய வேண்டும். அதனைத் தொடர்ந்து முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் தொழிலாளர்களுக்குப் பொருத்தமான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த அறிக்கை, 2024 ஜனவரி முதல் 2026 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள 45 தோட்டங்களுக்குச் சென்ற சர்வதேச மன்னிப்புச் சபை, 159 தொழிலாளர்கள், 2 தோட்ட முகாமையாளர்கள் மற்றும் 3 மேற்பார்வையாளர்களை நேர்காணல் செய்துள்ளதுடன், 65 தொழிலாளர்களுடன் 15 குழு விவாதங்களையும் நடத்தியுள்ளது.
19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளால் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவின் தென்பகுதியிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களின் வம்சாவளியினரான மலையகத் தமிழர்கள், நீண்டகாலமாக முறையான இனப் பாகுபாடுகளையும் புறக்கணிப்புகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். இதுவே அவர்களைக் கட்டாய உழைப்புக்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
இன்றுவரை அவர்கள் தங்களின் வாழ்வாதாரம், இருப்பிடம் மற்றும் நலன்புரித் தேவைகளுக்காகத் தங்களின் முதலாளிகளிலேயே பெருமளவில் தங்கியுள்ளனர். இதனால் மோசமான வாழ்க்கை மற்றும் பணிச்சூழல் அல்லது தொழிலாளர் சட்ட மீறல்களுக்கு எதிராக அவர்களால் குரல் எழுப்ப முடிவதில்லை.
பார்வையிடப்பட்ட 45 தோட்டங்களிலும் உள்ள தொழிலாளர்கள், தங்களின் வீட்டு வசதிக்காக முதலாளிகளையே நம்பியிருப்பதாகவும், எப்போது தங்களை வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவார்களோ என்ற அச்சத்திலேயே வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
15 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், வேலைக்குத் தாமதமாக வந்ததற்கோ அல்லது வழங்கப்படாத சம்பளம் குறித்துக் கேள்வி எழுப்பியதற்கோ தோட்ட முகாமையாளர்களால் வாய்மொழி மூலமாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
ஒரு தொழிலாளி வழங்கிய வாக்குமூலத்தில், “நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி வேலை செய்யாவிட்டால் அவர்கள் உங்களை அடிப்பார்கள்… கைகள், கால்கள் மற்றும் பொல்லுகளால் அடிப்பார்கள். சிலரை எங்களால் பார்க்க முடியாத அளவிற்கு மோசமாக அடித்துள்ளனர். இது இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வின்படி, தோட்ட முகாமையாளர்கள் சாத்தியமற்ற இலக்குகளை (Targets) முன்வைத்துச் சம்பளத்தை நிறுத்தி வைப்பதற்குக் போலியான காரணங்களைக் கூறுகின்றனர். இதனால் தொழிலாளர்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யச் சம்பள முன்பணங்கள் மற்றும் கடன்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு, மேலும் அதிகக் கடனாளிகளாக மாறுகின்றனர்.
பார்வையிடப்பட்ட 45 தோட்டங்களில் 27 தோட்டங்களில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 25 கிலோவிற்கும் அதிகமான தேயிலைக் கொழுந்துகளைப் பறிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்தச் சாத்தியமற்ற இலக்குகளை எட்டத் தவறினால், அவர்களின் நாளாந்தச் சம்பளத்தில் இருந்து கழிக்கப்பட்டு வெறும் 1,000 இலங்கை ரூபாய் (சுமார் 3.10 அமெரிக்க டாலர்) மட்டுமே வழங்கப்படுகிறது அல்லது சம்பளம் தாமதப்படுத்தப்படுகிறது.
சுப்பிரமணியம் என்ற தொழிலாளி கூறுகையில், “நாங்கள் ஒதுக்கப்பட்ட வேலையை முடிக்காவிட்டால், அவர்கள் மூன்று நாள் வேலையை ஒரு நாள் வேலையாகக் கணக்கிடுகிறார்கள். வேலையை முடித்தால் 1,000 ரூபாய் தருகிறார்கள்” என்றார். இத்தகைய தந்திரோபாயங்கள் தோட்ட உரிமையாளர்களுக்குத் தொழிலாளர்கள் செலுத்தும் கடனைத் தலைமுறை தலைமுறையாகத் தொடரச் செய்து, அவர்களைக் ‘கடன் அடிமைகளாக’ மாற்றுகின்றன.
குறைந்தது 22 தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் ஊரடங்குச் சட்டம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் போன்ற தங்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான தடைகளை விவரித்துள்ளனர். அவர்களின் வாழும் சூழலும் போதுமான வீட்டு வசதி, போதிய இடவசதி அல்லது முறையான சுகாதார வசதிகள் அற்றதாகவே காணப்படுகிறது.
உள்நாட்டுச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள தொழிலாளர் பாதுகாப்புகள் அரசால் நடைமுறைப்படுத்தப்படாததாலும், மலையகத் தமிழ் தொழிலாளர்களால் அவற்றை அணுக முடியாததாலும் இந்தத் துஷ்பிரயோகங்கள் மேலும் தீவிரமடைகின்றன.
தனியார் தோட்டங்கள் மற்றும் சிறு தோட்டங்களின் உரிமையாளர்கள் மலையகத் தமிழ் தொழிலாளர்களைச் சுரண்டும் நோக்கில் அவர்களை “நாளாந்த/தற்காலிகத் தொழிலாளர்கள்” (Casual workers) எனத் தவறாக வகைப்படுத்துகின்றனர். இதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ உரிமைகளும் அடிப்படைச் சட்டரீதியான சலுகைகளும் மறுக்கப்படுகின்றன. மிகச் சிலரே மகப்பேறு நலன்கள், ஓய்வூதியம் மற்றும் மருத்துவ விடுப்புகளைப் பெறுகின்றனர்.
மலையகத் தமிழ் தொழிலாளர்கள் நீதியைப் பெறுவதிலும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக மொழிப் பிரச்சினை ஒரு பெரும் தடையாக உள்ளது; ஏனெனில் பாதுகாப்பு வழங்க வேண்டிய அரச அதிகாரிகள் பொதுவாக மலையகத் தமிழ் மொழியைப் பேசுவதில்லை. அதோடு அரசு அதிகாரிகளின் பாகுபாடான நடத்தை மற்றும் வேலைவாய்ப்பு ஆவணங்கள் இல்லாமை போன்ற காரணங்களும் இதில் அடங்கும். அத்துடன், பல தோட்டங்களில் தொழிற்சங்கப் பிரதிநிதித்துவம் முழுமையாக இல்லை அல்லது முதலாளிகளால் தடை செய்யப்பட்டுள்ளது.
மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர் ஆய்வுகள் மற்றும் வேலைவாய்ப்புத் தரநிலைகளை அமல்படுத்துவதில் கடுமையான குறைபாடுகள் இருப்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
“ஆழமாக வேரூன்றிய பாகுபாடு, கடுமையான ஓரங்கட்டப்படல் மற்றும் அவர்களின் நிலையைத் திட்டமிட்டுத் தவறாக வகைப்படுத்துதல் ஆகியவை மலையகத் தமிழ் தொழிலாளர்களின் சுரண்டலுக்கு வழிவகுப்பதுடன், அவர்களுக்குச் சட்டத்தின் பாதுகாப்பையும் மறுக்கிறது” என்று ஸ்மிருதி சிங் கூறியுள்ளார்.
எனவே, சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், மலையகத் தமிழ் சமூகம் தங்களின் உரிமைகளைப் பெறுவதைத் தடுக்கும் தடைகளைத் தகர்க்கவும், தனியார் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர் பாதுகாப்பையும் பொறுப்புக்கூறலையும் வலுப்படுத்த வேண்டும் எனச் சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
Sri Lanka: Malaiyaha Tamil workers in private tea estates suffer serious labour abuses – new report










