மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா ஐக்கிய நலன்புரி வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த வெசாக் பௌர்ணமி தின அன்னதான நிகழ்வு, இன்று மதியம் 12 மணியளவில் மஸ்கெலியா பிரதேச சபை வளாகத்தின் முன்பாக நடைபெற்றது.
தேசியக் கொடி, பௌத்த கொடி மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் கொடி ஆகியன ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதனைத் தொடர்ந்து சமயப் பெரியார்களின் ஆன்மீகச் சொற்பொழிவுகளும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ கிருஷ்ணன் கலைச்செல்வியின் வாழ்த்துரையும் இடம்பெற்றன. அதன் பின்னரே பொதுமக்களுக்கான அன்னதானம் வழங்கும் பணி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆன்மீகப் பெரியார்களான மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த மதகுரு மற்றும் மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தின் பிரதம குரு ஆகியோர் கலந்துகொண்டு ஆசி வழங்கினர்.
மேலும், முக்கிய பிரமுகர்களாக:
கிருஷ்ணன் கலைச்செல்வி (நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்)
கந்தையா இராஜ்குமார் (மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர்)
பரமசிவம் ராஜ் அசோக் (மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளர்) மற்றும் சபை உறுப்பினர்கள்
எஸ். இராஜவீரன் (மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர்)
கணபதி நகுலேஸ்வரன் (முன்னாள் அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயலாளரும் ஆவார்)
இவர்களுடன் இலங்கை வங்கி முகாமையாளர், மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படையின் (STF) முகாம் தளபதி மற்றும் சிப்பாய்கள், மஸ்கெலியா ஐக்கிய நலன்புரி வர்த்தக சங்கத்தின் தலைவர், அதன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.










