தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான முறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளகோரி, புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிதரப் போராட்டம் இன்று(18) 2 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
” தொழிலாளர்கள் தமக்கு தீர்வு கிட்டும்வரை இந்த போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர். நாம் அவர்களுக்கு துணையாக நிற்போம்.” – என்று தேசிய முன்னணியின் (NUW) உப தலைவர் சண்முகராஜ் தெரிவித்தார்.
தோட்ட மக்களும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஐவருக்கும் மீண்டும் வேலை கிடைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ரொச்சைல்ட் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் ஐந்து பேர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அத்தோட்டத் தொழிலாளர்கள் இரண்டு நாட்களாகத் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தோட்டத்தில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் கட்சி பேதமின்றி இப்பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தன.
இதன் விளைவாக, இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை கம்பளை தொழில் திணைக்களத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றிற்கான நேரம் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது தமக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், ஏனைய தொழிலாளர்கள் தங்களது பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டு நேற்று முதல் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளனர்.
எனினும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஐந்து தொழிலாளர்களும், தமக்கு உறுதியான தீர்வு கிட்டும் வரை தங்களது போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.










