பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்கமுடியாவிட்டால் அரசாங்கத்திலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியேற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதற்கான காரணத்தையும் அவர் பட்டியலிட்டுக்காட்டியுள்ளார். இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியிருந்தார். இது தொடர்பில் 2020 ஜனவரியில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விசேட அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோரும் ஆயிரம் ரூபா தொடர்பில் உத்தரவாதங்களை வழங்கியிருந்தனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆசிர்வாதம் இருப்பதால் அரச தலையீட்டுடன் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனவே, ‘அடிப்படை நாட் சம்பளம் ஆயிரம் ரூபா’ என்பது அரசாங்கத்தின் உறுதிமொழியாகும். அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான அழுத்தங்களை பங்காளியான காங்கிரஸ் விடுக்கவேண்டும்.
அதனைவிடுத்து ஆயிரம் ரூபா கிடைக்கவில்லையெனில் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம் என கூறுவது இயலாமையின் வெளிப்படாகும். பேரம் பேசுவதில் ஏற்படும் தோல்வியை மூடிமறைத்து, மக்கள் மத்தியில் அனுதாபம் பெறுவதற்கு முன்னெடுக்கப்படும் நயவஞ்சக திட்டமாகும். எனவே, அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியவில்லையெனில் அரசாங்கத்தில் இருந்தே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறவேண்டும்.
ஆளுங்கட்சியில் இருப்பதால் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் காங்கிரசுக்கு இருக்கின்றது. அந்த வாய்ப்பை உரிய வகையில் பயன்படுத்தவேண்டும். அதனைவிடுத்து, கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகி – மக்களை வீதிக்கு இறக்கி போராடினால் சம்பள விடயத்தில் மேலும் இழுத்தடிப்புகள் இடம்பெறும். காலம் கடத்தப்படும். வெளியில் இருந்து நாம் போராடுவோம். அரசாங்கத்துக்குள் இருந்துக்கொண்டு காங்கிரஸ் போராடவேண்டும். இதுவே பொருத்தமான நடைமுறையாகும்.
குறிப்பாக கூட்டு ஒப்பந்தத்தில் அரசாங்க தரப்பையும் இணைப்பதற்கான ஏற்பாடுகளை தமிழ் முற்போக்கு கூட்டணியே நல்லாட்சியின்போது செய்திருந்தது. அடிப்படை நாட் சம்பளமாக 500 ரூபா வழங்கப்பட்ட நிலையில் அதனை 700 ரூபாவாக அதிகரிப்பதற்கான அழுத்தங்களை ஆளுந்தரப்பில் இருந்து வழங்கினோம். இதனால் வரலாற்றில் முதற்தடவையாக 40 வீத சம்பள அதிகரிப்பு கிடைத்தது. எனவே, ஆயிரம் ரூபாவுக்கு இன்னும் 300 ரூபா என்ற தொகையே அவசியம். அதற்கான ஏற்பாடுகளை திறைசேரி ஊடாகவேனும் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.” – என்றுள்ளது.