இரத்தினபுரி, இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78 ஆவது பொசன் பெரஹராவுக்காக அழைத்துச் செல்லப்பட்ட யானையொன்று திடீரென ஆவேசமடைந்து தாக்கியதில், அதன் பிரதான பாகனும் அவரது உதவியாளரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விகாரையின் வருடாந்த பொசன் பெரஹரா ஊர்வலத்துக்காக இரண்டு யானைகள் அழைத்து வரப்பட்டு, விகாரைக்கு அருகில் தற்காலிகமாகக் கட்டப்பட்டிருந்தன.
இன்று திங்கட்கிழமை காலை இந்த யானைகளில் ஒன்றுக்குத் தண்ணீர் புகட்டுவதற்காகப் பாகனின் உதவியாளர், யானையை இறக்குவானை ஆற்றை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார். இதன்போது, எதிர்பாராதவிதமாகத் திடீரென ஆவேசமடைந்த யானை, உதவியாளரைக் கொடூரமாகத் தாக்கி மிதித்துக் கொன்றுள்ளது.
உதவியாளரின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அவரை மீட்கும் நோக்கில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பிரதான யானைப் பாகனையும் அந்த யானை விடாது கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தக் கோரச் சம்பவத்தின் பின்னர், விகாரைக்கு அருகிலுள்ள வயல்வெளி ஒன்றுக்குள் அந்த யானை புகுந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவியது.
சம்பவம் குறித்து தகவலறிந்தவுடனேயே வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். வயல்வெளிக்குள் இருக்கும் யானைக்கு மயக்க மருந்து செலுத்தி, அதனைக் பாதுகாப்பான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அவசர நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.










