போர்ச்சுகல் கால்பந்து அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தற்போதைய ஆட்டம் குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
உலகக் கோப்பையில் காங்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரது குறைந்த வேகம் மற்றும் செயல்திறன் குறித்து நிபுணர்களும் முன்னாள் வீரர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
எனினும், ரொனால்டோவுக்கு மட்டுமே பந்து பாஸ் செய்ய வேண்டும் என்ற எந்தவொரு அழுத்தமும் வீரர்களுக்கு இல்லை என்று போர்ச்சுகல் அணியின் Francisco Conceicao திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
காங்கோ குடியரசுக்கு (DR Congo) எதிரான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்ததைத் தொடர்ந்து, 41 வயதான ரொனால்டோவின் வேகம் மற்றும் சுறுசுறுப்பு குறைவு, போர்ச்சுகல் அணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கிறதா என்று கால்பந்து விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏனைய வீரர்கள் சிறந்த அட்டாக் செய்யும் நிலையில் இருக்கும்போது, ரொனால்டோவுக்குத்தான் பந்தைக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் வீரர்களுக்கு இல்லை என்று ஞாயிற்றுக்கிழமை கான்சீகாவ் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “அவருக்கே பந்தை பாஸ் செய்ய வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. எதிரணி வீரர்கள் யாரும் தடுக்காமல், சிறந்த நிலையில் எந்த வீரர் இருக்கிறாரோ அவருக்கே நான் பந்தை பாஸ் செய்வேன்” என்றார்.
மேலும், “ரொனால்டோ அணியின் மற்றுமொரு வீரராகவே பார்க்கப்படுகிறார். ஒட்டுமொத்த அணியும் சிறப்பாகச் செயல்பட ஒவ்வொரு தனிநபரின் பங்களிப்பும் தேவை.
ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கை மற்றும் 41 வயதிலும் அவரிடம் இருக்கும் விளையாடும் ஆர்வம் ஆகியவற்றின் காரணமாக ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
அவரது தலைமைத்துவமும் அவர் அடிக்கும் கோல்களும் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த உதாரணம்” என்று யுவென்டஸ் (Juventus) அணியைச் சேர்ந்த கான்சீகாவ் கூறினார்.
காங்கோவுக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ களத்தில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டார்.
பெரும்பாலான நேரம் பந்து அவரிடம் செல்லாமல் ஓரங்கட்டப்பட்டே இருந்தார்.
அந்தப் போட்டியில் முழுமையாக விளையாடிய ரொனால்டோ, வெறும் 25 முறை மட்டுமே பந்தைத் தொட்டார். ஒரு முக்கிய சர்வதேச தொடரில் அவர் முழுமையாக விளையாடி இவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் பந்தைத் தொட்டது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு நேர்மாறாக, அவரது நீண்டகாலப் போட்டியாளரான 38 வயது லியோனல் மெஸ்ஸி, இதற்கு முந்தைய நாள் அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து, நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறச் செய்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது போர்ச்சுகல் அணி தங்களின் இரண்டாவது ‘கே’ பிரிவு (Group K) போட்டியில் செவ்வாய்க்கிழமை ஹூஸ்டனில் உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இத்தொடரில் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்ய போர்ச்சுகல் அணி இந்த 3 புள்ளிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.










