சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலான காணொளியில் பூனை ஒன்றைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விலங்கு நலக் கூட்டமைப்பு (AWC) அளித்த புகாரைத் தொடர்ந்து, தலாத்துஓயா பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
புகார் கிடைக்கப்பெற்ற குறுகிய நேரத்திற்குள் அதுல்கம பகுதியில் வைத்து 18 மற்றும் 19 வயதுடைய இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்களின் கூற்றுப்படி, இச்சம்பவம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே நடந்துள்ளது.
சந்தேகநபர்கள் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், தண்டனைச் சட்டக்கோவையின் 411 ஆம் பிரிவு, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 63(a) பிரிவு மற்றும் விலங்கு வன்கொடுமை தடுப்புச் சட்டங்களின் கீழ் அவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளைத் தலாத்துஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










