போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தங்களின் கடமைகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறைவேற்றத் தவறினால், அதற்கு ஈரான் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) எச்சரித்துள்ளார்.
இது குறித்து ஈரானின் ‘இஸ்னா’ (ISNA) செய்தி முகமையிடம் காலிபாஃப் கூறுகையில்,
“ஒப்பந்தங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வலுவாகக் கோருகிறோம். அமெரிக்காவும் சீயோனிச ஆட்சியும் (இஸ்ரேல்) தங்களது கடமைகளை நிறைவேற்றத் தவறினால், ஈரான் அதற்கு இணையான மற்றும் தகுந்த நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈரானிய தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கும் காலிபாஃப், வாஷிங்டனால் ஈரானை ராணுவ ரீதியாக எதிர்கொள்ள முடியாது என்றும், இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் அனைத்தும் “அடிப்படையில்லாத பிரச்சாரங்கள்” என்றும் குறிப்பிட்டார்.
“ரமலான் போரில் (Ramadan War) அமெரிக்காவும் சீயோனிச ஆட்சியும் தங்களது இலக்குகள் எதையும் அடையவில்லை. ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தோல்வியடைந்துவிட்டது என்பதை இன்று அனைவரும் உணர்ந்துள்ளனர். இறுதியில் அவர்களாகவே முன்வந்து போர்நிறுத்தத்தைக் கோரினர்,” என்றும் அவர் மேலும் கூறினார்.










