மறைந்த உச்ச தலைவருக்கு ஈரான் மக்கள் உணர்வுப்பூர்வமாக அஞசலி

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்கான பிரம்மாண்ட பொது நினைவேந்தல் நிகழ்வுகள் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்றுவருகின்றன.

கடந்த 37 ஆண்டுகாலமாக ஈரானில் முழு அதிகாரத்துடன் ஆட்சி செலுத்தி வந்த 86 வயதான கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கிய நிலையில், பிப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தியாகத்தின் அடையாளமாகவும், ஷியா இஸ்லாமியப் பிரிவில் பழிவாங்கலின் குறியீடாகவும் கருதப்படும் ‘சிவப்பு நிறக் கொடிகள்’ தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா (Grand Mosalla) நினைவேந்தல் தளம் மற்றும் பிற மக்கள் கூடும் இடங்களில் பரவலாகக் காணப்பட்டன.

“நாம் எழ வேண்டும்” (We must rise) என்ற உத்தியோகபூர்வ முழக்கத்துடன், சிவப்பு மற்றும் கருப்பு பின்னணியில் கமேனியின் படம் இந்த நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பிரம்மாண்ட மத வளாகத்தில் கூடி, படுகொலை செய்யப்பட்ட தங்கள் உச்ச தலைவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஒரு லாரி மூலம் இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திற்குக் கொண்டு வரப்பட்ட கமேனியின் சவப்பெட்டி, கொடிகளால் போர்த்தப்பட்டு மேடையின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.

சவப்பெட்டியைத் தொட முயலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, அது ஒரு உயரமான மேடையில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டு, இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினரின் (IRGC) பலத்த பாதுகாப்பில் இருந்தது.

இஸ்லாமிய விழுமியங்களைப் பின்பற்றும் வகையில், அஞ்சலி செலுத்த வந்த ஆண்களும் பெண்களும் ஒரு பெரிய தடுப்பு மூலம் பிரிக்கப்பட்டிருந்தனர். வளாகம் முழுவதும் உள்ள ஒலிபெருக்கிகளில் இருந்து மத வழிபாட்டுப் பாடல்களும் முழக்கங்களும் ஒலித்துக் கொண்டே இருந்தன.

அரசு ஊடகங்கள் வெளியிட்ட காணொளிகளில், மெட்ரோ ரயில் நிலையங்களில் திரண்டிருந்த மக்கள் “அமெரிக்கா ஒழிக”, “இஸ்ரேல் ஒழிக” என்று முழக்கமிடுவதைக் காண முடிந்தது.

“எங்கள் தலைவரின் மரணத்திற்குப் பழிவாங்கவே நாங்கள் அனைவரும் இங்கு வந்துள்ளோம். நாங்கள் அனைவரும் இனி அவரது மகனின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோம். அவரே இந்தப் புரட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்வார்,” என்று கருப்பு நிற சாடோர் (chador) அணிந்திருந்த 55 வயதான பாத்திமா என்ற பெண் கூறினார்.

கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) மார்ச் மாதத்தில் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகரில் கவச வாகனங்கள், கனரக இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர்கள் (Snipers) எனப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மொசல்லா வளாகத்திற்குள் நுழைந்த ஆண்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பவர் பேங்க், இயர்போன் மற்றும் லைட்டர்கள் போன்ற மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாதுகாப்பு காரணங்களால், புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு பொதுவெளியில் தோன்றாத மொஜ்தபா கமேனி இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.

1979-ல் ஈரானின் கடைசி மன்னரான முகமது ரெசா ஷா பஹ்லவியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இஸ்லாமியக் குடியரசு அமைக்கப்பட்ட பிறகு, தற்போதைய உச்ச தலைவரின் படுகொலை அவரது ஆதரவாளர்களை மேலும் ஒன்றிணைத்துள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1989-ஆம் ஆண்டு இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் ருஹொல்லா கொமேனியின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட அலைகடலெனத் திரண்ட கூட்டத்தைப் போன்றே, இப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

(அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததால், கொமேனியின் உடல் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டது).

தெஹ்ரான் முழுவதும் ஆயிரக்கணக்கான தற்காலிக ‘மொகெப்கள்’ (மத சேவை நிலையங்கள்) அமைக்கப்பட்டு, ஷியா மதப் பாடல்கள் இசைக்கப்பட்டன.

36 டிகிரி செல்சியஸ் (97 டிகிரி ஃபாரன்ஹீட்) வெயில் நிலவியதால், இந்த நிலையங்களில் ராட்சத மின்விசிறிகள் பொருத்தப்பட்டு, மக்களுக்கு இலவச பானங்கள் வழங்கப்பட்டன. அவசர மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

தெஹ்ரானின் பெரும்பாலான பகுதிகள் தற்காலிகத் தடுப்புகளால் மூடப்பட்டு, அரசு சாரா வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் திங்கட்கிழமை வரை நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் நாடு முழுவதும் சுமார் 1 கோடி மக்கள் பங்கெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை தெஹ்ரானில் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெறும். அதைத் தொடர்ந்து கமேனியின் உடல் ஷியா பிரிவினரின் புனிதத் தலங்களான கோம் (Qom), நஜாஃப் (Najaf) மற்றும் கர்பலா (Karbala) வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, வியாழக்கிழமையன்று அவரது சொந்த ஊரான மஷாத் (Mashhad) நகரில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

அதே நேரத்தில், சிலர் இந்தத் தொடர் விடுமுறையைப் பயன்படுத்தி தெஹ்ரானின் வெயிலில் இருந்தும் கூட்ட நெரிசலில் இருந்தும் தப்பிக்க, குளிர்ச்சியான காஸ்பியன் கடல் ஒட்டிய வடக்கு மாகாணங்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் தெஹ்ரான்-ஷோமல் விரைவுச்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போர் தொடங்கிய பிறகு முதன்முறையாகப் பொதுவெளியில் தோன்றிய IRGC-ன் தலைமைத் தளபதி அஹ்மத் வாஹிதி, “நம் எதிரிகள் நாம் சரணடைவோம் என்ற கனவோடுதான் கல்லறைக்குச் செல்வார்கள். தியாகியான நமது இமாமின் தூய்மையான இரத்தம், உலகளாவிய காஃபிர்களுக்கு எதிரான இஸ்லாத்தின் வெற்றியில் மற்றொரு திருப்புமுனையாக அமையும்” என்று அரசுத் தொலைக்காட்சியில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

Related Articles

Latest Articles