காலாவதியான சீனியை மீண்டும் பொதி செய்து, குறைந்த விலையில் சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி நடவடிக்கை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பேலியகொடையில் உள்ள முன்னணி சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான களஞ்சியசாலை நேற்று (6) முற்றுகையிடப்பட்டது.
கம்பஹா மாவட்டத்தின் களனி, பேலியகொட பகுதியில் அமைந்துள்ள பெரிய களஞ்சிய வளாகம் ஒன்று குறித்து வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் பேரில், நுகர்வோர் விவகார அதிகார சபையும் (CAA) வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்து இந்த முற்றுகையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின்போது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்டு ஏற்கனவே காலாவதியான சீனி அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த காலாவதியான சீனி, காலாவதியாகாத சீனி கையிருப்புடன் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, பின்னர் மீண்டும் புதிய உறைகளில் பொதி செய்யப்பட்டு, தற்போதைய சந்தை விலையை விட கணிசமாகக் குறைந்த விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.
அங்கு நடத்தப்பட்ட சோதனையின்போது, தலா 50 கிலோ எடை கொண்ட சுமார் 85,000 சீனி மூடைகள் அந்தக் களஞ்சியசாலைக்குள் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இது ஒட்டுமொத்தமாக 4.2 மில்லியன் கிலோவுக்கும் (42 இலட்சம் கிலோ) அதிகளவான சீனியாகும்.
இந்த மோசடி நடவடிக்கையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள், மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மீறல்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், முழு களஞ்சிய வளாகத்திற்கும் உத்தியோகபூர்வமாக சீல் வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
