சிறைச்சாலை மோதல்: 14 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் மரணம் – பிரேத பரிசோதனையில் உறுதி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளின்போது கொல்லப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளின் மரணங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகளில், அவர்கள் கொடூரமான முறையில் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கைகளின்படி, பலத்த ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட கடுமையான தலைக்காயங்கள் காரணமாகவே இந்த அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட 28 சடலங்களில் 24 சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகளை, டாக்டர் சுஜீவ விக்ரமசிங்க தலைமையிலான ஐந்து பேர் கொண்ட சிரேஷ்ட சட்ட மருத்துவ அதிகாரிகளின் குழுவினர் மேற்கொண்டனர்.

இக்குழுவில் வைத்தியர் பிரசன்ன அப்புஹாமி, வைத்தியர் சமந்த விஜேரத்ன, வைத்தியர் சமிந்த ராஜபக்ஷ, வைத்தியர் ரமேஷ் அக்கியவன்ன ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

தடயவியல் சோதனைகளின்படி, உயிரிழந்த 24 பேரில் 14 பேரின் மரணத்துக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயமே காரணம் என்பதுடன், ஒன்பது பேர் பலத்த காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ளது.

பலத்த காயங்களால் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள், கனமான பொருட்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதால் மரணத்தை விளைவிக்கக்கூடிய தலைக்காயங்களுக்கு ஆளானதாக தடயவியல் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சிறைச்சாலை உயிரிழப்புகள் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் நேற்று (ஜூலை 9) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ந்தன. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த 24 பலியானோரின் சடலங்கள் இறுதிச் சடங்குகளுக்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

எஞ்சிய நான்கு சடலங்கள் மீதான பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பரிசோதனைக்காக காத்திருக்கும் சடலங்களில் ஒன்று இந்தியப் பிரஜையுடையது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலானி பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், எஞ்சிய பிரேத பரிசோதனை அறிக்கைகளை விரைவாக சமர்ப்பிக்குமாறு அவர் சட்ட மருத்துவக் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறைச்சாலை வன்முறைகள் மற்றும் மரணங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles