இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், மனிதர்களின் நேரடிச் செயல்பாடுகளின் காரணமாக மொத்தம் 75 காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் தகவல்படி, 30 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத மின்சார வேலிகள் அல்லது மின்சாரக் கம்பிகளில் சிக்கி 23 யானைகள் உயிரிழந்துள்ளன. பொதுவாக “ஹக்கா பட்டாஸ்” (தாடை வெடிகள்) என்று அழைக்கப்படும் வெடிமருந்துப் பொறிகளை உட் கொண்டதால் மேலும் 19 யானைகள் கொல்லப்பட்டதுடன், மூன்று யானைகள் விஷம் வைக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளன.
இச்சம்பவங்களுக்கு மேலதிகமாக, ரயில்களுடன் மோதியதில் இரண்டு யானைகளும், வீதி விபத்துகளில் நான்கு யானைகளும், விவசாயக் கிணறுகளுக்குள் விழுந்து ஆறு யானைகளும் உயிரிழந்துள்ளன. மேலும் மூன்று யானைகளின் மரணங்கள் இதர விபத்துகளால் ஏற்பட்டுள்ளன.
மனிதர்களின் நேரடிச் செயல்பாடுகள், விபத்துகள் மற்றும் இயற்கைக் காரணங்களால் இந்த ஏழு மாத காலப்பகுதியில் 180 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு வனவிலங்கு பிராந்தியத்தில் அதிகபட்சமாக 44 யானை மரணங்கள் பதிவாகியுள்ளன. அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை வனவிலங்கு பிராந்தியங்களிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான யானை மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் யானைத் தாக்குதல்களினால் 56 பேர் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.










