விடைபெற்றது கிரிக்கெட் உலகின் விஸ்வரூபம்: கண்ணீரில் கரீபியன் தீவுகள்

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த சகலதுறை ஆட்டக்காரரும், விளையாட்டு உலகின் ஈடு இணையற்ற அடையாளமுமான சர் கேரி சோபர்ஸ் (Sir Garry Sobers) தனது 89ஆவது வயதில் பார்படாஸில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

கிரிக்கெட் விளையாடிய வீரர்களிலேயே மிகவும் திறமை வாய்ந்த, தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரராகக் கருதப்படும் சோபர்ஸ், டெஸ்ட் போட்டிகளில் ஒரு சிறந்த பேட்டராக மட்டுமன்றி, இடதுகை வேகப்பந்து வீச்சாளராகவும், சுழற்பந்து (Orthodox and Wrist-spin) வீச்சாளராகவும் ஜொலித்தார்.

அத்தோடு, களத்தடுப்பிலும் (Fielding) மிக நெருக்கமான கேட்சுகளைப் பிடிப்பதிலும் அசாத்திய திறமை படைத்தவர்.

இவரது இந்த பன்முகத்திறமையைக் கண்ட சக கிரிக்கெட் ஜாம்பவான் சர் டொனால்ட் பிராட்மேன், இவரை “ஐந்து திறமைகளைக் கொண்ட ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர்” (Five-in-one cricketer) என்று வர்ணித்திருந்தார்.

சாதனைகளின் நாயகன்

சர் கேரி சோபர்ஸ் 1954 முதல் 1974 வரை மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 57.78 என்ற சராசரியுடன் 8,032 ரன்களைக் குவித்துள்ளார்.

பந்துவீச்சில் 34.03 சராசரியுடன் 235 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மேலும், 1965 முதல் 1972 வரையிலான காலகட்டத்தில் 39 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியை வழிநடத்தி, 9 வெற்றிகளையும் 10 தோல்விகளையும் பதிவு செய்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஆண்டின் சிறந்த ஆண் கிரிக்கெட் வீரருக்கான முதன்மை விருது, இவரைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது’ என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

உலக சாதனைப் பயணம்

தனது 16ஆவது வயதில், 1953 ஜனவரியில் இந்திய அணிக்கு எதிரான முதல்தர போட்டியில் அறிமுகமாகி, முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதற்கு அடுத்த ஆண்டே இங்கிலாந்துக்கு எதிராக ஜமைக்காவில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

ஆரம்பத்தில் ஒரு பந்துவீச்சாளராகவே டெஸ்ட் போட்டிகளில் களம் கண்ட சோபர்ஸ், தனது 21ஆவது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக 365 ரன்கள் குவித்து, தனது முதல் டெஸ்ட் சதத்தையே உலக சாதனையாக மாற்றினார்.

லென் ஹட்டனின் உலக சாதனையை முறியடித்த இந்த ஸ்கோர், 1994இல் பிரையன் லாராவால் முறியடிக்கப்படும் வரை 36ஆண்டுகள் நீடித்தது. அந்த வரலாற்றுச் சாதனையைக் நேரில் கண்டு லாராவை சோபர்ஸ் வாழ்த்தியிருந்தார்.

அதேபோல், 1968ஆம் ஆண்டில் நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக விளையாடிய போது, மால்கம் நாஷ் வீசிய ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, முதல்தர கிரிக்கெட்டில் இந்த சாதனையைப் படைத்த முதல் வீரர் என்ற வரலாற்றைப் படைத்தார்.

அங்கீகாரங்களும் விருதுகளும்

விஸ்டன் (Wisden) பத்திரிகையால் 2000ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ‘நூற்றாண்டின் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களில்’ ஒருவராக பிராட்மேன், சர் ஜாக் ஹோப்ஸ், சர் விவ் ரிச்சர்ட்ஸ் மற்றும் ஷேன் வார்னே ஆகியோருடன் சோபர்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரிக்கெட் துறைக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக 1975ஆம் ஆண்டு பிரித்தானிய அரசால் அவருக்கு ‘சர்’ (Knighted) பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

பார்படாஸில் 1936இல் பிறந்த சோபர்ஸ், ஆறு குழந்தைகளில் ஐந்தாவதாகப் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின் போது (1942) அவரது தந்தை இறந்ததால், தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தார்.

பிறக்கும் போது இரு கைகளிலும் தலா ஆறு விரல்களுடன் பிறந்த இவருக்கு, சிறுவயதிலேயே கூடுதல் விரல்கள் அகற்றப்பட்டன. கிரிக்கெட் மட்டுமன்றி கூடைப்பந்து, கால்பந்து மற்றும் கோல்ஃப் ஆகிய விளையாட்டுகளிலும் அவர் சிறந்து விளங்கினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles