ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு, உலகக் கிண்ணத் தங்கம் மற்றும் பதக்கங்களுடன் கூடுதலாக ‘சாம்பியன்ஷிப் மோதிரங்களும்’ (Championship rings) வழங்கப்படும் என்று சர்வதேச காற்பந்து சம்மேளனம் (FIFA) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை, FIFA அமைப்பு தனது முதன்மைத் தொடரை அமெரிக்க விளையாட்டுப் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க (Americanise) முயல்வதன் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
பிரத்யேகமாக வடிவமைக்கப்படும் மோதிரங்கள்
‘நியூயார்க் நியூ ஜெர்சி’ மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்குக்குப் பிறகு, வெற்றி பெறும் அணிக்கு 30 பிரத்யேக மோதிரங்கள் வழங்கப்படும் என்று FIFA தெரிவித்துள்ளது. போட்டியின் முடிவில், அந்த அணியின் கேப்டன் மற்றும் தலைமைப் பயிற்சியாளருக்கு தற்காலிக மோதிரங்கள் உடனடியாக வழங்கப்படும்.
அதன்பின்னர், சாம்பியன் பட்டம் வெல்லும் அணியின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு வீரரின் அளவிற்கேற்ப இந்த மோதிரங்கள் தனிப்பயனாக்கப்பட்டு (Customised) பின்னொரு நாளில் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும்.
இந்த மோதிரத்தின் ஒரு பக்கத்தில் உலகக் கிண்ணக் கோப்பையின் வடிவமும், மறுபக்கத்தின் சாம்பியன் அணியின் விபரங்களும் பொறிக்கப்பட்டிருக்கும்.
வீரர்களுக்கு வழங்கப்படும் மோதிரங்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 2,026 மோதிரங்கள் மட்டுமே பிரத்தியேகமாக (Limited edition) தயாரிக்கப்படும். மீதமுள்ள 1,996 மோதிரங்கள் பிஃபாவின் அதிகாரப்பூர்வ உரிமம் பெற்ற தயாரிப்புகளாக உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் விற்பனைக்காகக் கிடைக்கும்.
அமெரிக்க விளையாட்டுப் பாணியின் தாக்கம்
அமெரிக்காவின் NFL, NBA, Major League Baseball மற்றும் NHL போன்ற முக்கிய விளையாட்டுகளில் சாம்பியன்ஷிப் மோதிரங்கள் வழங்கும் பாரம்பரியம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், பிஃபாவின் போட்டி ஒன்றில் இத்தகைய மோதிரங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க விளையாட்டு உலகின் பிம்பத்திற்கு ஏற்ப, காற்பந்து விளையாட்டின் கட்டமைப்பு மற்றும் அதன் வேகத்தை மாற்றுவதற்கு பிஃபா காட்டி வரும் தீவிர ஆர்வத்தை இந்த மோதிர அறிமுகம் வெளிப்படுத்துகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில், சூப்பர் போல் (Super Bowl) தொடரைப் போன்ற பிரம்மாண்டமான இடைவேளை கலைநிகழ்ச்சியும் (Halftime entertainment show) இடம்பெறவுள்ளது.
தொடரும் விமர்சனங்கள்
இது தவிர, இந்தத் தொடர் முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ள ‘ஹைட்ரேஷன் பிரேக்ஸ்’ (Hydration breaks – நீர் அருந்துவதற்கான இடைவேளை) காற்பந்து போட்டியை நான்கு காலாண்டுகளாக (Quarters) பிரித்துள்ளது.
போட்டியின் 22வது மற்றும் 67வது நிமிடங்களில் வழங்கப்படும் இந்த 3 நிமிட இடைவேளைகள், வானிலை சூழலுக்குத் தேவைப்படுகிறதா இல்லையா என்பதைக் கடந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்க கோடைகாலத்தின் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைக் கருத்தில் கொண்டு, வீரர்களின் நலனுக்காகவே இந்த கொள்கை அமல்படுத்தப்பட்டதாக பிஃபா வாதிடுகிறது.
இருப்பினும், இந்த இடைவேளைகள் போட்டியின் இயல்பான வேகத்தைக் கெடுப்பதாகவும், அணிகள் தங்களை மீண்டும் ஒருங்கிணைத்துக் கொள்ளவும், பயிற்சியாளர்கள் தங்களது வியூகங்களை மாற்றியமைக்கவும் (Tactical timeouts) மறைமுகமாக வழிவகை செய்வதாக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அத்தோடு, இந்த இடைவேளைகள் விளம்பரங்களுக்கான வணிக வாய்ப்புகளை உருவாக்கியுள்ள போதிலும், விளம்பர நோக்கத்திற்காக இவை அறிமுகப்படுத்தப்படவில்லை என்றே FIFA மறுத்து வருகிறது.
