மோகினி எல்ல பகுதியில் இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 வயது மாணவி இன்று (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கண்டி போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
நல்லத்தண்ணி, முர்ரே தோட்டத்தைச் சேர்ந்தவரும், மஸ்கெலியா புனித ஜோசப் கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயின்றுவந்தவருமான செல்வம் திஷ்னா என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
கடந்த ஜூலை 22 ஆம் திகதி காலை இடம்பெற்ற இந்த விபத்தில், ஆட்டோ சாரதியும் பயணி ஒருவரும் அன்றைய தினமே உயிரிழந்தனர். அத்துடன் மேலும் இரண்டு மாணவிகளும் மாணவன் ஒருவரும் படுகாயமடைந்தனர்.
தற்போது இந்த மாணவியின் உயிரிழப்புடன், இவ்விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.










