ஜனநாயகக் கொங்கோ குடியரசில் (DR Congo) மிக வேகமாகப் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700-ஐத் தாண்டியுள்ளது.
எனினும், இதற்கான தடுப்பூசிகள் மற்றும் முன்னோடிச் சிகிச்சை முறைகளுக்கான பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 15 ஆம் திகதி கண்டறியப்பட்ட இந்த எபோலா அனர்த்தத்தில், இதுவரை 3,802 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,707 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்தின் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்த 17,000-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய மற்றும் மிக வேகமாகப் பரவக்கூடிய எபோலா தொற்றாக இது பதிவாகியுள்ளது. ‘புந்திபுக்யோ’ (Bundibugyo) என்ற அபூர்வ வகை வைரஸ் திரிபினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால், இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது நேரடிச் சிகிச்சைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஜெனீவாவில் கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி வசீ மூர்த்தி (Vasee Moorthy), முந்தைய எபோலா பரவல்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை பரிசோதனை சிகிச்சைகளை மிக விரைவாகத் தொடங்க முடிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
நிலைமையை நேரில் ஆராய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) கொங்கோவின் தலைநகரான கின்ஷாசாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சவால்களும் வேலைநிறுத்தப் போராட்டமும்
கிழக்கு மாகாணமான இத்துரியிலேயே (Ituri) 90 சதவீதமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சுகாதாரப் பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் துறைக்கான நிதிப் பற்றாக்குறை, ஆயுதக் குழுக்களின் வன்முறைகள் மற்றும் சுகாதார மையங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாகத் தடுப்பு நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், பாதுகாப்பற்ற பணிச்சூழலைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.










