இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, புதுடெல்லியில் நடைபெறும் நிகழ்வொன்றில் இணையவழியில் உரையாற்றுவது குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என பங்களாதேஷ் கேட்டுக்கொண்டுள்ளது.
தலைமறைவாக உள்ள ஒரு குற்றவாளிக்கு அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிப்பது, இரு நாடுகளுக்குமிடையே சீரடைந்து வரும் இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்றும் டாக்கா எச்சரித்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷில் வெடித்த மாணவர் போராட்டத்தை அடுத்து, ஷேக் ஹசீனா ஆட்சியை இழந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு இரண்டாம் ஆண்டு நிறைவடடைவதைக் குறிக்கும் வகையில், புதுடெல்லியில் உள்ள ‘தெற்காசிய வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சங்கம்’ (FCCSA) ஆகஸ்ட் 5-ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் ஹசீனா காணொளி வாயிலாக உரையாற்றவுள்ளார்.
ஹசீனாவைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு பங்களாதேஷ் தொடர்ந்து கோரி வரும் நிலையிலும், தாம் வரும் டிசம்பர் மாதம் பங்களாதேஷ் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பங்களாதேஷ் வெளியுறவுத் இராஜாங்க அமைச்சர் ஷாமா ஒபாயித் இஸ்லாம் (Shama Obaed Islam) தெரிவிக்கையில்:
“நாங்கள் இந்தியாவுடன் எதிர்காலத்தை நோக்கிய அணுகுமுறையுடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். அந்த முன்னேற்றம் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, இது குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
குற்ற வழக்குகளில் தேடப்படும் தலைமறைவுக் குற்றவாளியின் கருத்துகளால் இந்தியா – பங்களாதேஷ் உறவுகள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்திய மண்ணில் இருந்து குற்றவாளிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்றே இந்தியா முன்னதாகக் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிகழ்வை இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்யவில்லை என்றபோதிலும், தேவைப்பட்டால் இராஜதந்திர வழிகள் ஊடாக எங்களது கவலையைத் தெரிவிப்போம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.










