மஸ்கெலியா, லக்கம் தோட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர், லக்கம் தமிழ் வித்யாலயத்தின் பிரதான மண்டபத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 4 ஆம் திகதி முதல் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் சமூகச் செயற்பாட்டாளர் ஒருவரும் அருள்வாசகம் என்பவரும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மக்களின் தேவைகளைக் கேட்டறிந்தனர்.
அத்துடன், கிராம உத்தியோகத்தருடன் தொடர்புகொண்டு அடுத்தகட்ட நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய உதவிகளையும்ச் செய்தனர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள, மஸ்கெலியா பிளாண்டேஷன் (RPK) பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான லக்கம் தோட்டத்தில், லயன் வீடுகள் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதுடன் வீடுகளுக்குள் வெள்ளநீரும் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனையடுத்து, பாதுகாப்பு கருதிப் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் தற்காலிகமாக லக்கம் தமிழ் வித்யாலயத்தின் பிரதான மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் எனப் பலரும் அடங்குவதாக மவுசாக்கலை கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.
நேற்று (05) மழை சற்றுத் தணிந்திருந்த போதிலும், நள்ளிரவு முதல் மீண்டும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில, இன்று (06) பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் பாடசாலையை விட்டு வெளியேறித் தங்களது சொந்த வீடுகளுக்குச் செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், தங்களது வீடுகள் அமைந்துள்ள பகுதி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால், அங்குச் சென்று வாழ முடியாத சூழ்நிலை நிலவுவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சினை குறித்துப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடம் கேட்டபோது, “பாடசாலை முதன்மை மண்டபத்திலிருந்து மாற்றப்பட்டு, அதே பாடசாலையின் வேறொரு மண்டபத்தில் அவர்கள் மீண்டும் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்” என விளக்கமளித்தார்.

எனவே, இச்சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நோர்வூட் பிரதேச செயலாளர், நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களான மஞ்சுள சுரவீரஆரச்சி, கிருஷ்ணன் கலைச்செல்வி மற்றும் ஏனைய மக்கள் பிரதிநிதிகள் உடனடியாகக் கவனம் செலுத்தி, தமக்கு நிரந்தர வீடமைப்புத் தீர்வை வழங்கிட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்










