கொழும்பு, ஹெவ்லொக் டவுனில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சேமிப்புக் கிடங்கொன்றில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்பைக் கொண்ட மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) பறிமுதல் செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (05) இச்சோதனையை நடத்திய அதிகாரசபையின் புலனாய்வாளர்கள், இறக்குமதி உரிமம் இல்லாத பெருமளவிலான மருந்துகள் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்துள்ளனர்.
தேவையான சட்டபூர்வ அனுமதியின்றி பயணிகள் லக்கேஜ்கள் மூலம் நாட்டிற்குள் மருந்துகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, அவற்றை மொத்த மற்றும் சில்லறை விற்பனை மூலம் விநியோகித்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கையின்போது புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் மருந்துகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளின் சந்தை மதிப்பு 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
