தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து தேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திராய்ரோங் பியவ்பன் (Trairong Phiwphan) தெரிவித்துள்ளார்.
நொந்தபுரி (Nonthaburi) மாகாணத்தில் உள்ள குறித்த இரண்டாம் நிலை பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மாணவனும் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரான அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாக நொந்தபுரி மாகாண பொலிஸ் தளபதி லெப்டினன்ட் கர்னல் டெச்ரபி கோங்டி (Dechrapee Kongdee) உறுதிப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டினால் காயமடையவில்லை என்றும், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோதே காயமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்கிழக்காசிய பிராந்தியத்திலேயே அதிகளவில் துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ள நாடுகளில் தாய்லாந்தும் ஒன்றாகும். அங்கு சுமார் 10 மில்லியன் துப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.அதாவது நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழு பேரில் ஒருவரிடம் துப்பாக்கி உள்ளது.
துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை இறுக்கமாக்குவதாகக் கடந்த காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், இவ்வாறான தொடர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிவிட்டன.










