ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவு: ஷாகிப் அல் ஹசனுக்கு பங்களாதேஷில் தடை!

பதவி இழந்த முன்னாள் பிரதமரும், குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட தலைவருமான ஷேக் ஹசீனா பங்கேற்ற ஊடக நிகழ்வு ஒன்றில் பங்களாதேஷின் முன்னாள் நட்சத்திரக் துடுப்பாட்ட வீரர் ஷாகிப் அல் ஹசன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் தேசிய அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் எதுவுமில்லை என்று பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.

மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதுடெல்லியில் பத்திரிகையாளர்களிடையே ஹசீனா உரையாற்றிய நிகழ்வில் ஷாகிப் தொலைபேசி வாயிலாகப் பங்கேற்றார்.

ஹசீனாவின் ‘அவாமி லீக்’ கட்சியின் அரசியல்வாதியாக இருந்த ஷாகிப் அல் ஹசன் விஷயத்தில், அரசு இதுவரை ஓரளவு நெகிழ்வுத் தன்மையுடனேயே செயல்பட்டு வந்ததாக பங்களாதேஷ் இளையோர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அமீனுல் ஹக் தெரிவித்துள்ளார்.

ஹசீனா ஆட்சியை வீழ்த்திய போராட்டங்களின்போது இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் தொடர்பாக விசாரணை எதிர்கொள்ளும் பல டஜன் நபர்களில், தற்போது இலங்கையில் தங்கியிருக்கும் ஷாகிப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அமைச்சர் அமீனுல் ஹக் வெளியிட்ட அறிக்கையில்:

“நாங்கள் இந்த விவகாரத்தை மிகவும் நெகிழ்வுத்தன்மையுடனும் சகிப்புத்தன்மையுடனும் அணுகி வந்தோம். ஆனால் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அப்படி யோசிப்பதற்கு இனி எந்தவொரு இடமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஒரு சர்வாதிகாரியுடன் மேடையைப் பகிர்ந்துகொண்ட ஒருவருக்கு மீண்டும் அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு இனி ஒருபோதும் இல்லை,” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

39 வயதான ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், பங்களாதேஷின் மிக வெற்றிகரமான துடுப்பாட்ட வீரரும், நாட்டின் முன்னணி விளையாட்டுப் பிரபலங்களில் ஒருவருமாவார்.

இலங்கையில் தங்கியிருக்கும் ஷாகிப், கொலைக் குற்றச்சாட்டுகள் உட்படத் தன் மீதான வழக்குகளை எதிர்கொள்ள பங்களாதேஷ் திரும்பத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், 2023 உலகக் கோப்பையில் அணியை வழிநடத்தியது போல, 2027 கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் தனது நாட்டிற்காக மீண்டும் விளையாட நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related Articles

Latest Articles